வணிகம்

இந்திய கட்டமைப்புத் துறையில் அந்நிய ஓய்வூதிய முதலீடுகளுக்கு அழைப்பு: சிஐஐ கூட்டத்தில் கட்கரி பேச்சு

பிடிஐ

இந்திய கட்டமைப்புத் துறை மேம்பாட்டில் அந்நிய ஓய்வூதிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, நடப்பு நிதி ஆண்டில் (2015-16) சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 42 ஆயிரம் கோடி ஒதுக்கி யுள்ளது. இருப்பினும் இத்துறை வளர்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே வெளிநாட்டு ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் இத்துறையில் முதலீடு செய்யலாம் என்றும் அதை அரசு எதிர் நோக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சாலை மற்றும் கப்பல் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது நாளொன்றுக்கு 12 கி.மீ. தூரம் நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த அளவு நாளொன்றுக்கு 30 கி.மீ. தூரம் என உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நிலம் கையகப் படுத்துதல் மசோதா ஒரு போதும் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல, இதன் மூலம் கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகும் என்று கட்கரி குறிப்பிட்டார்.

சாலை கட்டமைப்புத் துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்து இந்திய நிறுவனங்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. என்று இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஸார் ஆயில் நிறுவனத் தலைவர் பிரசாந்த் ரூயா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT