வணிகம்

ஆப்பிள் ஐ-போன் விற்பனையை முந்தியது சாம்சங் எஸ்6

ராய்ட்டர்ஸ்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாம்சங் தயாரிப்புகள் முந்தி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளே முதலிடத்தை வகித்து வந்தன. ஆனால் தற்போது கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தயாரிப்புகளின் கேலக்ஸி எஸ்6 என்ற மாடலின் வரவு ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சாம்சங் நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவன லாபம் அதிகரித்ததற்கு அந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்6 ரக மாடல் பெருமளவில் விற்பனையானதும் ஒரு காரணமாகும்.

ஸ்மார்ட்போன் விற்பனையில் தொடர்ந்து தேக்க நிலையைச் சந்தித்துவந்த சாம்சங் நிறுவனம் புதிய வடிவமைப்பு, தயாரிப்புக்காகக் காத்திருந்தது. அவ்விதம் காத்திருந்து வெளியிட்ட எஸ்6 வருகையால் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்ததோடு லாபமும் உயர்ந்தது.

எதிர்பார்ப்பையும் மீறி கேலக்ஸி எஸ்6 விற்பனை உள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் பார்க் ஜின்-யங் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 564 கோடி டாலராக இருந்தது. கேலக்ஸி எஸ்6 விற்பனை தொடர்பாக பங்குதாரர்களிடையே நம்பிக்கை உருவாகாததால் சாம்சங் நிறுவனப் பங்குகள் சமீபகாலமாக இறங்குமுகத்தை சந்தித்தன.

முதலீட்டாளர்களிடையே நம்பிக் கையை ஏற்படுத்தும் விதமாக நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளோடு எஸ்6 விற்பனை அதிகரித்ததும் படிப் படியாக சாம்சங் பங்குகளின் விலை உயர்வுக்கு வழியேற் படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT