வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் அது பற்றிய விவரத்தை அரசுக்குத் தெரிவிக்க சில மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் என்று மத்திய வருவாய்த்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். புதிதாக மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதாவில் இத்ததகைய வாய்ப்பு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், புதிய மசோதா நிறைவேறிய பிறகு எவ்வளவு கால அவகாசம் அளிக்கலாம் என்பது முடிவு செய்யப்படும் என்றார். எத்தனை மாத அவகாசம் அளிக்கப்படும் என்று கேட்டதற்கு, சில மாதங்கள் என்று பதிலளித்தார். இது குறித்து அரசு இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றார்.
கணக்கில் காட்டப்படாத அந்நிய வருவாய் மற்றும் சொத்து (தடுப்பு சட்டம்) மசோதா 2015 அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த மசோதா கடந்த மார்ச் 21-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கருப்புப் பணம் குறித்த புதிய மசோதா மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் 16 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகளைக் கூடத் தொடர முடியும் என்று தாஸ் குறிப்பிட்டார். கருப்புப் பணத்தை வெளி நாடுகளில் பதுக்கிய விவரத்தை அரசுக்கு தெரிவிப்பதற்கு சில மாத அவகாசம் அளிக்கப்படும். இந்த காலத்தில் அவர்கள் விவரங்களைத் தெரிவித்து அபராதம் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும்.
கடந்த காலங்களில் முறையற்ற வகையில் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள சொத்து விவரங்களைத் தெரிவிப்பதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய மசோதாவில் வழக்கமான வரி விதிப்பைப் போல மூன்று மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும், அதாவது பதுக்கி வைக்கப்பட்ட தொகையில் 90 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். இது வழக்கமாக விதிக்கப்படும் 30 சதவீத வரியைக் காட்டிலும் அதிகமானதாகும்.
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண் டனை விதிக்கவும் மசோதா வகை செய்கிறது. வழக்கமான வருமான வரி விதிப்பு சட்டத்தின் கீழ் வரி விதிப்பதற்குப் பதிலாக வெளிநாட்டில் சேர்த்து வைக்கப்பட்ட வருமானத்துக் கென தனி வரி விதிப்பு முறை இந்த மசோதாவில் தனியாக உள்ளது.