சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் ரூ. 1,500 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
குறைந்த செலவிலான ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்ற இந்நிறுவனம் திட்டமிட்டு இத்தகைய முதலீட்டை மேற்கொள்கிறது. இதன் மூலம் வளரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டமான `மேக் இன் இந்தியா’ திட்டத்தை செயல்படுத் துவதற்காக இந்தியாவில் இத் தகைய முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கள் தயாரிப்பு களுக்கான மூலப்பொருளை இந்தியாவிலேயே உருவாக்க முடியும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலை வர் மகேஷ் கொடுமுடி தெரிவித்தார். ஹன்னோவரில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் இடமாக இந்தியா திகழும் என்றும் அதற்காக ரூ. 1,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு 65 ஆயிரம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் 60 சதவீதம் சக்கன் ஆலையில் தயாரானவை என்று கொடுமுடி கூறினார். இந்த ஆண்டு 70 ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சக்கன் மற்றும் அவுரங்காபாத் ஆலைகளின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத் தைப் பொறுத்தமட்டில் உத்தி சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சந்தையாக இந்தியா திகழ்கிறது என்று ஃபோக்ஸ்வேகன் ஏஜி நிறுவன தலைவர் மார்டின் வின்டெர்கோர்ன் தெரிவித்தார்.
2018-ம் ஆண்டில் நிறுவன உற்பத்தி 2 லட்சத்தை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறினார். சக்கன் ஆலை ஆண்டுக்கு 1.30 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பிராண்டை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கொடுமுடி கூறினார். இந்த ஆண்டு நிறுவனத்தின் பிரபல மாடலான பசாட் மற்றும் பீட்டில் ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட ரகங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார்.
இந்தியாவில் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு 24 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இது 25 லட்சமாக உயரும் வாய்ப்புள்ளது. 2020-ம் ஆண்டில் இது 44 லட்சமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக கொடுமுடி கூறினார்.
அடிக்கடி கொள்கை மாற்றங்கள் செய்ததால் அது கரன்சி மதிப்பில் மிகப் பெரிய ஏற்ற, இறக்க நிலையை கடந்த 2 ஆண்டுகளில் ஏற்படுத்தியது. இது தொழில்துறையைக் கடுமை யாகப் பாதித்துள்ளது என்று கூறினார். அரசு ஸ்திரமான கொள்கை மற்றும் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். அத்துடன் சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
ஏற்றுமதிக்கு அளிக்கும் ஊக்கத் தொகையை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. இது நிறுவனத்தின் ஏற்றுமதியை வெகுவாகப் பாதிக்கும். எனவே இது குறித்து அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக கொடுமுடி குறிப்பிட்டார்.