வணிகம்

சன் பார்மா நிறுவனத்தில் இருந்து டாய்ச்சி சாங்க்யோ வெளியேறியது- 9% பங்குகளையும் விற்றது

செய்திப்பிரிவு

ஜப்பானிய மருந்து நிறுவனமான டாய்ச்சி சாங்க்யோ, சன் பார்மா நிறுவனத்தில் இருந்து முழுமையாக வெளியேறியது. அந்த நிறுவனத்தில் இருந்த 9 சதவீத பங்குகளை நேற்று பங்குச்சந்தையில் டாய்ச்சி சாங்க்யோ நிறுவனம் விற்றது. இந்த நிறுவனத்தில் இருந்த 21.49 கோடி பங்குகளையும் விற்றுள் ளது. இதன் மதிப்பு 20,420 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விற்பனைக்கு டாய்ச்சி சாங்க்யோ இயக்குநர் குழு ஏப்ரல் 20-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

சராசரியாக ஒரு பங்கு 950 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. பகுதி பகுதியாக இந்த பங்குகள் விற்கப்பட்டன. 930 முதல் 968 ரூபாய் இடைவெளியில் இந்த பங்குகள் விற்கப்பட்டன.இதனால் சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் கடுமையாக சரிந்தன.

டாய்ச்சி சாங்க்யோ நிறுவ னம் இந்திய சந்தையில் 2008-ம் ஆண்டு நுழைந்தது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் பெரும் பாலான பங்குகளை இந்த நிறுவனம் கையகப்படுத்தியது. 460 கோடி டாலர் கொடுத்து ரான்பாக்ஸி நிறுவனத்தின் நிறுவனர் களிடமிருந்து நிறுவனத்தை டாய்ச்சி வாங்கியது. இந்த இடைப் பட்ட ஏழு ஆண்டு காலத்தில் ஜப்பானிய நிறுவனம் பல சிக்கல் களை சந்தித்தது.

கடந்த மாதம் ரான்பாக்ஸி நிறுவனத்தை 400 கோடி டாலர் கொடுத்து சன் பார்மா வாங்கியது. இதில் ஒரு ரான்பாக்ஸி பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு 0.8 சன் பார்மா பங்குகள் வழங்கப்பட்டன. சன் பார்மா ரான்பாக்ஸி இணைப் பின் போது டாய்ச்சி சாங்க்யோ நிறுவனத்திடம் 63.4 சதவீத ரான்பாக்ஸி பங்குகள் இருந்தன.

2008-ம் ஆண்டு, அமெரிக்க உணவு ஒழுங்கு முறை ஆணையம் 30 ஜெனரிக் வகை மருந்துகளை தடை செய்தது. தன்னுடைய உற்பத்தி தொழிற்சாலைகளில் விதிமுறைகளை மீறியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு ஆவணங்களில் முறைகேடு நடைபெற்றதாக சட்ட ரீதியான நடவடிக்கையும் இந்த நிறுவனம் மீது தொடுக்கப்பட்டது. மேலும் 50 கோடி டாலர் அளவுக்கு 2013-ம் ஆண்டில் இந்த நிறுவனம் அபராதம் செலுத்தியது. இதன் காரணமாக நிறுவன இயக்குநர் குழுவுக்கு சம்பளம் குறைக்கப்பட்டது.

இந்த பங்குகள் விற்பனை குறித்து டாய்ச்சி சாங்க்யோ நிறுவனம் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டது. பங்குகள் விற்பனை காரணமாக ஆரம்பத்தில் 11 சதவீத அளவுக்கு சன் பார்மா பங்கு சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 8.78 சதவீதம் சரிந்து 952 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

ஜூன் 2008 - டாய்ச்சி சாங்க்யோ ரான்பாக்ஸி நிறுவனத்தை கையகப்படுத்தியது.

ஏப்ரல் 2014 - ரான்பாக்ஸி நிறுவனத்தை சன் பார்மா வாங்கியது. 1 ரான்பாக்ஸி பங்குக்கு 0.8 சன் பார்மா பங்கு வழங்கப்பட்டது.

ஏப்ரல் 2015 - சன் பார்மா நிறுவனத்தில் இருந்த மொத்த பங்குகளையும் ஜப்பானிய நிறுவமான டாய்ச்சி சாங்க்யோ விற்றது.

SCROLL FOR NEXT