வணிகம்

ஸ்பைஸ்ஜெட் இயக்குநர் குழுவில் அஜய் சிங் மனைவி நியமிக்கப்பட வாய்ப்பு?

செய்திப்பிரிவு

பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்கவேண்டும் என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில், நிறுவனர் அஜய் சிங்கின் மனைவி ஷிவானி சிங் இயக்குநராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை ஷிவானி நியமிக் கப்பட்டாலும், குறிப்பிட்ட தேதிக் குள் (மார்ச் 31) பெண் இயக்குநரை நியமிக்காததால் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஷிவானி நியமிக்கப்பட்டால், விமான நிறுவன உரிமையாளர் மனைவி ஒருவர் இயக்குநர் குழுவில் நியமிக்கப்படுவது இரண்டாவது முறையாக இருக்கும்.

ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனதின் உரிமையாளர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார். விமானத்துறையில் ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இன்னொரு முக்கிய நிறுவனமான இண்டிகோ பட்டியலிட தயாராகி வருகிறது.

பெண் இயக்குநர்களை நியமிக்க செபி விடுத்த காலக்கெடு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை பெண் இயக்குநர்களை நியமிப்பவர்கள் 50,000 ரூபாய் அபராதமும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை பெண் இயக்குநர்களை நியமிக்கும் நிறுவனங்கள் 50,000 ரூபாயுடன் ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் கூடுதலாகவும் செலுத்த வேண்டும்.

அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பெண் இயக்குநர்களை நியமிக்கும் நிறுவனங்கள் 1.42 லட்ச ரூபாயுடன் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை பெண் இயக்குநர்களை நியமிக்காத நிறுவனங்கள் மீது வேறு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT