பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி போனஸ் கடன் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ரூ.10,360 கோடிக்கு இந்த பத்திரங்களை வெளியிடப்போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக அளவிலான கடன் பத்திரங்களை வெளியிடும் முதல் இந்திய நிறுவனமாக என்டிபிசி உள்ளது. இதன் மூலம் பங்குதாரர்களுக்கு புதுமையான ஊக்கப்படுத்தும் முயற்சியாக இது இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக என்டிபிசி-யின் இந்த திட்டத்துக்கு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தில் அனுமதி வாங்கியிருந்தது. மேலும் இந்த திட்டத்தை அறிவிக்க பங்குதாரர்களும் ஒப்புதல் அளித்திருந்தனர். இந்த போனஸ் கடன் பத்திரங்களின் முக மதிப்பு ரூ. 12.50 விலையாக இருக்கும்.
ரூ. 10 பங்கு மதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் இது வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கான இறுதி அனுமதியை நிறுவனங்கள் விவகாரத்துறையிலிருந்து நேற்று முன்தினம் வாங்கியது இந்த நிறுவனம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு மாற்றிக்கொள்ளவியலாத, வரிச்சலுகையுடன் கூடிய , பெய்ட் அப் போனஸ் கடன் பத்திரங்களை ரூ. 12.50 முக மதிப்பில் வெளியிட அனுமதி வழங்கியிருந்தது. உறுப்பினர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள இருப்பு வைத்திருந்தது.
பங்குதாரர்களுக்கு எந்த நிலையிலும் கடன் பத்திரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உள்ளதாக பிஎஸ்இ மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு அளித்துள்ள கடிதத்தில் என்டிபிசி குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து என்டிபிசி பங்குகள் 52 வரங்களுக்கு பிறகு 5 சதவீத ஏற்றம் கண்டது.
இந்த கடன் பத்திரங்களை முறையே 8ம் ஆண்டு, 9ம் ஆண்டு மற்றும் 10 ஆண்டுகளில் 20 சதவீதம்,40 சதவீதம் 40 சதவீதம் என திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.