மத்தியில் ஆட்சிக்கு வரும் புதிய அரசு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னரை மாற்றக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நியமனத்தை புதிய அரசு மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டம் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடை பெற உள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள சிதம்பரம், அங்கு புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது:
ஒருவரது கடந்தகால சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில் தான் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்படுகிறார். அவ்விதம் நியமிக்கப்பட்டவரது நியமனத்தை அடுத்து வரும் அரசு மதிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகளைக் காட்டிலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கருதுகிறது. அப்படியிருக்கும்பட்சத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் தொடர அனுமதிக்காது என்ற கருத்து எழுந்துள்ளது.
மேலும் பாஜக தலைவர்கள் சிலர், தற்போதைய பொருளாதார சூழலுக்கு ரகுராம் ராஜனின் கொள்கைகளே காரணம் என கூறியுள்ளனர். இதனால் அவர் பதவியில் தொடர முடியாது என்றே தோன்றுகிறது. இந்நிலையில் அஸ்தானாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இக்கருத்தை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.