வணிகம்

சீனாவிலிருந்து உருக்கு இறக்குமதியை தடை செய்யும் திட்டம் இல்லை’

செய்திப்பிரிவு

சீனாவிலிருந்து உருக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு தடை விதிக்கும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய உருக்கு மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது விளக்க மளித்த அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் மொத்தம் 29 லட்சம் டன் உருக்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சீனாவிலிருந்து உருக்கு இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அமைச்சர் இத்தகவலை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இருப்பினும் சீனாவிலிருந்து தரமான உருக்கு இறக்குமதி செய்யப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று குறிப்பிட்ட அவர், தரமற்ற உருக்கு இறக்குமதியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

உருக்கு மீதான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்தத்துறையின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாகத்தான் அரசு செயல்பட முடியுமே தவிர, அதற்கு மேல் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்றார்.

மேலும் உருக்கின் தேவைக் கேற்பவும் அதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும்தான் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு மக்களவையில் பதிலளித்த அமைச்சர், சீனாவிலிருந்தான இறக்குமதி 10 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

சமீபகாலமாக சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உருக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மொத்த உருக்கு இறக்குமதி 83 லட்சம் டன்னாகும். இது கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையான காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

முதலீடு அதிகரிப்பு

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதால் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பிரதமரின் வெளிநாட்டு பயணம் இரு நாடுகளிடையே நல்லுறவை வளர்க்க உதவுவதோடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலையும் உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் அந்நிய முதலீடு 27 சதவீதம் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதன் மொத்த மதிப்பு 2,104 கோடி டாலராகும். கடந்த நிதி ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு 1,656 கோடி டாலர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகபட்சமாக தொலைத் தொடர்புத் துறையில் 267 கோடி டாலரும், ஆட்டோமொபைல் துறையில் 158 கோடி டாலரும், பார்மா துறையில் 121 கோடி டாலரும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் 97 லட்சம் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மொரீஷியஸிலிருந்து அதிக பட்சமாக 589 கோடி டாலரும், சிங்கப்பூரிலிருந்து 431 கோடி டாலரும், நெதர்லாந்திலிருந்து 257 கோடி டாலரும், அமெரிக்கா விலிருந்து 148 கோடி டாலரும், ஜப்பானிலிருந்து 142 கோடி டாலர் முதலீடும் வந்துள்ளதாக அவர் கூறினார்.

குறைந்த கட்டணம்

இந்தியாவில்தான் செல்போன் கட்டணம் குறைவாக உள்ளதாக மக்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களைக் காட்டிலும் குறைந்த தொகையையே இந்தியர்கள் செலுத்துகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச தொலைத் தொடர்பு கட்டண விகிதங்களின்படி பார்க்கும் போது இந்தியாவில்தான் கட்டணம் குறைவாக உள்ளது என்ற அவர், இலங்கை, பாகிஸ்தான், சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவை விட இங்கு கட்டணம் குறைவு என்றார்.

மொத்தம் உள்ள 94 கோடி செல்போன் உபயோகிப்பாளர் களில் 90 சதவீதம் பேர் பிரீபெய்ட் உபயோகிப்பாளர்களாக உள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT