தொடர்ந்து 8 வருடங்களாக இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை விஞ்சினார் சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சாங்வி. புதன் கிழமை நிலவரப்படி திலிப் சாங்வியின் சொத்து மதிப்பு 2,150 கோடி டாலராக இருந்தது.
போர்ப்ஸ் பத்திரிகை வெளி யிட்டுள்ள இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி 2ம் இடத்திலும், விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 3-ம் இடத்திலும் இருக்கிறார்கள். சர்வதேச பணக் காரர்கள் பட்டியலில் திலிப் சாங்வி 37-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
முகேஷ் அம்பானி 43-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். புதன் கிழமை சன்பார்மா பங்குகளின் விலை அதிகம் உயர்ந்ததை அடுத்து முதல் இடத்துக்கு முன்னேறினார் சாங்வி. நேற்றைய வர்த்தகத்திலும் சன்பார்மா பங்கு உயர்ந்து 52 வார உச்சபட்ச புள்ளியை அடைந்தது.
வர்த்தகத்தின் முடிவில் 3.22 சதவீதம் உயர்ந்து 1038.75 ரூபாயில் முடிவடைந்தது. சன்பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் நிறுவன பங்கு 10 சதவீதம் உயர்ந்து 473 ரூபாயில் முடிவடைந்தது.
சன் பார்மா-வில் 63.65 சதவீத பங்களும், சன்பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் நிறுவனத்தில் 67.13 சதவீத பங்குகளும் திலிப் சாங்வி வசம் உள்ளன.