வணிகம்

வசதி படைத்தவர்களுக்கு எல்பிஜி மானியத்தை நிறுத்தும் திட்டம் இல்லை: மாநிலங்களவையில் ஜெயந்த் சின்ஹா அறிவிப்பு

செய்திப்பிரிவு

பணக்காரர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு (எல்பிஜி) அளிக்கப்படும் மானியத்தை நிறுத்தும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுவரையில் 1.46 லட்சம் வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு மானியம் தேவையில்லை என்றும் சந்தை விலையில் சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பணக்காரர்களுக்கு சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தை நிறுத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் வசதி படைத்தவர்கள் மானிய உதவி வேண்டாம் என கூறுவதற்கான விழிப்புணர்வை அரசு மேற் கொள்ளும் என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் மானிய உதவியை தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ அவரவர் வங்கிக் கணக்கில் மின்னணு முறையில் (டிபிடி) மாற்றம் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

சிலிண்டருக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்பட்டது.

இதுவரையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இன்னமும் உரத்துக்கான மானியம் இந்த வகையில் வழங்குவது தொடங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பயனாளிகளுக்கு மானியம் நேரடியாக அளிப்பதன் மூலம் உரியவர்களுக்கு சலுகை கிடைப்பதோடு ஏழை மக்களுக்கு இது சென்றடைய வேண்டும் என்பதுதான் மானியம் அளிப்பதின் நோக்கம் என்று கூறினார்.

நேரடி பண மாற்ற திட்டமானது மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு, கல்வி உதவித் தொகை, தொழிலாளர் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கும் இவ்விதம் வங்கிக் கணக்கில் பண பரிவர்த்தனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

வாராக் கடன்

பொதுத்துறை வங்கிகளில் 10 பெரிய நிறுவனங்கள் திரும்ப செலுத்த வேண்டிய தொகை ரூ. 28,152 கோடி என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

433 பேர் சுமார் ரூ. 1,000 கோடிக்கு மேலான கடன் தொகை பெற்றவர்களாவர். இவர்கள் பெற்ற தொகை ரூ. 16.31 லட்சம் கோடியாகும். ஒட்டுமொத்த வாராக் கடன் தொகையில் இது 1.73 சதவீதமாகும்.

ரூ. 5 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பற்றிய விவரத்தை ரிசர்வ் வங்கிக்கு பொதுத்துறை வங்கிகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது என்றார்.

வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்தவும், வாராக் கடன் அளவைக் குறைப்பதற்கும் தேவை யான வழிகாட்டு நெறிகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து அளித்து வருகிறது என்று சின்ஹா கூறினார்.

ரூ. 1 கோடிக்கும் மேலான கடனை வசூலிப்பதற்கு அந்தந்த வங்கிகளின் இயக்குநர் குழு தனி கொள்கையை வகுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் நிலுவை தொகை கடந்த 3 ஆண்டுகளில் குறையவில்லை என்று குறிப்பிட்ட அவர், 2014-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி நிலுவைத் தொகை ரூ. 22.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

திரும்ப அளிக்க வேண்டிய வருமான வரி ரூ. 1,19,000 கோடி

வருமான வரியை கூடுதலாக செலுத்தியவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டிய தொகை ரூ. 1,19,000 கோடி என்று ஜெயந்த் சின்ஹா கூறினார்.

இது கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக சேர்ந்துள்ள தொகை என்றார். 2012-ம் நிதி ஆண்டு முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார். மார்ச் 5, 2015 நிலவரப்படி கடந்த 3 நிதி ஆண்டுகளில் செலுத்த வேண்டிய தொகை இது என்று அவர் குறிப்பிட்டார். நடப்பு நிதி ஆண்டில் (2014-15) திரும்ப அளிக்க வேண்டிய தொகை ரூ. 68,032 கோடி.

இது 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ. 43,963 கோடியாகவும், 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ. 7,968 கோடி என்றும் அவர் குறிப்பிட்டார். மார்ச் 7ம் தேதி வரை நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1,06,499 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது நடப்பு நிதி ஆண்டில் திரும்ப அளிக்க வேண்டிய தொகையில் 32 சதவீதமாகும்.

நடப்பு நிதி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி இலக்கு ரூ. 7 லட்சம் கோடியாகும். வரும் நிதி ஆண்டுக்கு வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றம் எதையும் செய்யவில்லை. ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு 2 சதவீத கூடுதல் வரி (சர் சார்ஜ்) விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT