மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிலிப்ஸ் நிறுவனம் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்நிறுவனம் நான்கு மாடல் புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் வகையிலான இந்நிறுவன செல்போன்களின் விலை ரூ. 1,960 முதல் ரூ. 20,650 வரையாகும். இந்தியச் சந்தையில் புதிய அறிமுகம் மூலம் மீண்டும் நுழைந்துள்ளதாக பிரிவு மேலாளர் எஸ்.எஸ். பாஸி தெரிவித்தார். அடுத்த மாதம் ரூ. 35 ஆயிரம் விலையிலான மேலும் இரண்டு புதிய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக இவர் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் செல்போன்களை அறிமுகப்படுத்தியது. பிறகு விற்பனையை நிறுத்தியது. இப்போது மீண்டும் செல்போன் விற்பனையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவன செல்போன்களை விற்க ரெடிங்டன் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது பிலிப்ஸ். விற்பனை அதிகரிக்கும்போது பிரத்யேக விற்பனையகங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக பாஸி தெரிவித்தார். புதிய ரக செல்போன் டபிள்யூ3500, டபிள்யூ 6610, எஸ் 308 ஆகியன தொடு திரை வசதி கொண்டவை. இ130 பேஸ் மாடல் செல்போனாகும்.