சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14-வது நிதிக்குழு அறிக்கை மற்றும் மத்திய பட்ஜெட்டில் விலக்கிக் கொள்ளப்பட்ட உதவித் தொகை காரணமாக வரும் நிதி ஆண்டில் (2015-16) தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த புதனன்று நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட 14-வது நிதிக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டினை 32 சதவீதத் தில் இருந்து 10 சதவீதம் கூட்டி, 42 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது.
அதே சமயத்தில், மத்திய அரசின் மொத்த வரி வருவா யில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக் கப்படும் நிதியில், தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் அளவு 4.969%-ல் இருந்து, 4.023% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய ஆண்டுகளில் பெற்றுவந்த தொகையில் இருந்து இருபது சதவீதம் குறையும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்துக்கு இப்போது மட்டுமல்ல, மத்திய வரி வருவாய் பங்களிப்பில் இருந்து நிதி ஒதுக்கீடு எப்போதுமே தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 13-வது நிதிக்குழு பரிந்துரைப்படி, மத்திய வரி வருவாய் பங்களிப் பானது 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாகக் குறைக்கப் பட்டது. அது தற்போது, 4.023 சதவீதமாக சுருங்கிவி்ட்டது.
இதுதவிர, கடந்த சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு நிதியுதவி அளித்து வரும் 8 சமூக நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக, 24 திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவி விகிதத்தில் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக் கப்படும் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 10 சதவீதம் உயர்த் தப்பட்டிருந்தாலும், 24 சமூக நலத் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட வரி வருவாய் பலனளிக்காது. ஒரு பக்கம் கொடுப்பது போல் கொடுத்து, மானியத் தொகையை யும் குறைத்திருப்பது நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
முன்பு, இந்த திட்டத்துக்கு இவ் வளவு என ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இப்போது, ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு அதை எப்படி வேண்டுமானால் செலவு செய்து கொள்ளுங்கள் என்று மத்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசு மட்டும் வருமான வரி, கலால், நிறுவன, சேவை வரி மற்றும் சுங்க வரி போன்றவற்றில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வழியேற்படுத்திக் கொண்டுள்ளது.
மத்திய நிதியுதவியுடன் கூடிய நலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. அதனைப் பெருமளவில் குறைக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. அதைப் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவரும். எப்படியிருந்தாலும் அது தமிழகத்துக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். இதனால் தமிழகம் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகும் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியது, “நம் மாநிலத்தில், மொத்த உற்பத்தி விகிதாச்சார (ஜிஎஸ்டிபி) அடிப்படையில் தனிநபர் வரிவிகிதம் (பெர் கேபிட்டா) 10 சதவீதத்தைத் தொட்டுவிட்டது. இது இந்தியாவிலேயே அதிகம். மற்ற மாநிலங்களில் இது 6 சதவீத அளவில் உள்ளது.
அதனால், மாநில பட்ஜெட்டில் நாம் மேலும் வரி உயர்வினை விதிப்பது சிரமம். இவற்றின் காரணமாக நமக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும். மேலும் 14-வது நிதிக்குழு அறிக்கை, சட்டப்பூர்வமானது என்பதால், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யமுடியாது என்று குறிப்பிட்டனர்.