வணிகம்

`முன் தேதியிட்ட வரி விதிப்பு இனி இருக்காது’

பிடிஐ

இந்தியாவில் இனி முன் தேதியிட்ட வரி விதிப்பு முறை இருக்காது என்று மத்திய தொழில் கொள்கை மேம்பாட்டுத் துறையின் செயலர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

வோடபோன் வரி விதிப்பு பிரச்சினையில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என அரசு தெரிவித்ததிலிருந்தே அரசின் நிலைப்பாடு தெளிவாகிவிட்டது. நிறுவனங்களை வதைக்கும் வரி விதிப்பு முறையை இந்த அரசு ஒரு போதும் ஏற்காது என்பது தெளிவுபட புலனாகிவிட்டது. முன்பிருந்த வரி விதிப்பு முறைகள் அனைத்தும் வழக்கொழிந்து போகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தனது துறையும் தொழில் துறையினருடன் மிகவும் சுமூகமான போக்கை மேற்கொள்ளும் என்று அவர் சுட்டிக் காட்டினார். வரி விதிப்பு முறையில் ஸ்திரமான அதேசமயம் வெளிப்படையான கொள்கைகளை வகுக்க அரசு முயற்சித்து வருவதாக அவர் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் வோட போன் நிறுவனம் மீதான ரூ. 3,200 கோடி வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதிலும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இந்தியா இப்போது அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. இத்தகைய சூழலில் தொழில் துறையைப் பாதிக்கும் எத்தகைய வரி விதிப்புகளையும் அரசு நிச்சயம் முன்னெடுத்து செல்லாது என்று அவர் உறுதி படக் கூறினார்.

SCROLL FOR NEXT