பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களில் 6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 18,699 கோடி சரிந்துள்ளது. இதில் அதிகபட்ச சரிவை சந்தித்தது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்தான்.
கடந்த வாரம் பங்குச் சந்தையில் 1.25 சதவீத சரிவு ஏற்பட்டதில் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்தது. இதில் ஐடிசி, கோல் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவையும் அடங்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூ. 6,165 கோடி சரிந்து ரூ. 3,00,0560 கோடியாக இருந்தது. கோல் இந்தியா நிறுவனம் ரூ. 2,789 கோடி சரிவை சந்தித்து ரூ. 1,52,733 கோடியாக இருந்தது. ஐடிசி நிறுவனத்துக்கு ரூ. 2,744 கோடி சரிந்ததில் அதன் சந்தை மதிப்பு ரூ. 2,70,527 கோடியாக இருந்தது.
ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 2,113 கோடியும், ஐசிஐசிஐ வங்கி ரூ. 2,014 கோடியும் சரிந்தது. அதேசமயம் ஓஎன்ஜிசி பங்கின் சந்தை மதிப்பு ரூ. 6,631 கோடி அதிகரித்து ரூ. 2,81,561 கோடியாக உயர்ந்தது. இன்ஃபோசிஸ் மதிப்பு ரூ. 2,616 கோடி உயர்ந்து ரூ. 1,84,892 கோடியானது.
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,450 கோடி உயர்ந்து ரூ. 1,41,703 கோடியாகவும், டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ. 1,293 கோடி உயர்ந்ததில் ரூ. 4,32,653 கோடியாகவும் உயர்ந்தது.