தேர்தல் முடிவுகளை ஒட்டி நிகழும் எதிர்பாராத சந்தை சூழ்நிலைகளை சமாளிக்கும் திட்டம் தயாராக இருக்கிறது என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். சந்தை வர்த்தகத்தில் நிகழும் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதற்கும், சந்தையில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தவும், தேவையான நிதியை விடுவிப்பதற்கான திட்டம் தயார் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இது குறித்து நிதி அமைச்சகம் மற்றும் செபி ஆகிய அமைப்புகளுடன் ஏற்கெனவே பேச்சு வார்த்தை நடத்திவிட்டதாகவும், தேர்தல் முடிவுகளை ஒட்டி சந்தை வர்த்தகம் சரியாகவே நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேலே உயர்ந்திருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 10 மாதங்களில் இல்லாத உயர்வை அடைந்திருக்கிறது.
பொதுவாக தேர்தல் முடிவுகளை ஒட்டி பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது வழக்கம். முன்னதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தேர்தல் முடிவுகளை ஒட்டி நிகழும் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குமுறை ஆணையங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
வட்டிவிகிதத்தை உயர்த்துவதுதான் ஒரேவழி
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் வழிமுறைகளில் வட்டிவிகிதத்தை உயர்த்துவது ஒன்றுதான் பிரதானமான வழிமுறை என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார். ஆனால் அரசிடம் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி விநியோகத்தை அதிகப்படுத்தும் வாய்ப்பு அரசிடம் இருக்கிறது என்று தெரிவித்தார். ஒன்றாக இருவரும் சேர்ந்தால்தான் பணவீக்கத்தை குறைக்க முடியும் என்றவர் இந்த வருட இறுதியில் பணவீக்கத்தை 8 சதவீதத்துக்குள் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.