இந்தியாவின் நீள அகலங்களை தனது ராயல் என்ஃபீல்டு புல்லட்டால் அளந்து வந்துள்ள பத்திரிகையாளர் சுரேஷ் செல்வராஜ், ஒவ்வொரு 300-வது கிலோ மீட்டரிலும் புதிய நிலம், புதிய மக்கள், புதிய கலாசாரத்தை பார்த்தேன் என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
புல்லட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டை வைத்திருப்பவர்களுக்காக ``ராயல் இந்தியன்ஸ் என்ஃபீல்ட் ஓனர்ஸ் கிளப்’’ என்னும் மையம் பெங்களூருவில் இயங்கி வருகிறது. இந்த கிளப்பின் உறுப்பினர்கள் வார இறுதி சவாரிகள், மாத சவாரி என்று வாழ்க்கையின் பெரும்பகுதியை தேசாந்திரியாக கழிக்கின்றனர்.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகம் செல்வது, மார்கெட் போவது என தங்களின் அன்றாட பணிகளுக்காகவே அவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதைத்தாண்டி அரிதாக எப்போதாவது கொஞ்சம் தூரம் தங்கள் வாகனத்தோடு நகர்வலம் வருபவர்களும் உள்ளனர்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஈ.சி.ஆர் பக்கமும், அண்ணா சாலையிலும் ரேஸிங் போகும் இளைஞர்களைக் கண்டிருப்போம். அந்த இளைஞர்களுக்கு வேகம் தான் முக்கியம். முன்னிரவில் மெரினாவில் மின்னும் வண்ண விளக்குகள், சிறுவர்கள் என ரசிப்பதற்கான அத்தனை விஷயங்களையும், அவர்களின் ஆக்சிலேட்டர் முறுக்கு உதறி தள்ளிவிடும். ரேஸிங்கில் ரசிப்பதோ, அனுபவத்தை பெறுவதோ மிகக்குறைவு.
இந்த சூழலில் இந்தியாவின் மலைகள், குன்றுகள், பாலைவனங்கள், வற்றாத ஜீவநதிகள், கடற்கரை பிரதேசங்கள், எழில் கொஞ்சும் கிராமங்கள், விண்ணை முட்டும் கார்ப்பரேட் கட்டிடங்களை உள்ளடக்கிய பெருநகரங்கள் என வெவ்வேறு நிலங்களையும் அங்கு வசிக்கும் வெவ்வேறு தரப்பட்ட மனிதர்களையும் 20 நாட்களுக்குள்ளாக ராயல் என்ஃபீல்டில் வலம் வந்து ரசித்திருக்கிறார்கள் மேற்சொன்ன ராயல் இந்தியன்ஸ் என்ஃபீல்டு ஓனர்ஸ் கிளப்பை சேர்ந்த 15 சாதாரண மனிதர்கள். இந்த பயணத்தை மேற்கொண்ட குழுவில் அவுட்லுக், ஏசியாநெட் டிவி போன்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளை வகித்த பத்திரிகையாளர் சுரேஷ் செல்வராஜும் ஒருவர்
தனது நெடும்பயணம் குறித்து கூறியது:
சாதாரணமாக ஒரு டூ-வீலரை ஓட்டுபவர்களுக்கும் ராயல் என்ஃபீல்டை ஓட்டுபவர்களுக்கும் நிறைய வித்தியா சங்கள் உள்ளன. எனக்கு 1971-ம் ஆண்டு உடன் பணிபுரியும் நண்பர் மூலம் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து ராயல் இந்தியன்ஸ் என்ஃபீல்டு ஓனர்ஸ் கிளப்பிலும் இடம்பிடித்தேன். அந்த கிளப்பில் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் பல சாகச பயணங்களை மேற்கொள்ளும் வாடிக்கையை கொண்டவர்கள்.
இந்த வகையில் பெங்களூருவிலிருந்து சண்டீகர் சென்று அங்கிருந்து புல்லட்டில் லடாக் செல்ல திட்டமிட்டார்கள். இதற்காக அவசர அவசரமாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 சிசி புல்லட்டை நான் வாங்கினேன். இந்த பயணத்துக்காகவும், சிறு ஓய்வுக்காகவும் எனது பணியையும் விட்டுவிட்டு 15 பேர் கொண்ட குழுவோடு லடாக் புறப்பட தயாரானோம். முன்னதாக டெஸ்ட் ரைடு அடிப்படையில் பெங்களூருவிலிருந்து கொல்லி மலைக்கு ஒரு சவாரி சென்றிருந்தோம்.
நாங்கள் லடாக் செல்வதோடு கொல்லி மலை பயணத்தை ஒப்பிட்டால் அலுவலகத்தின் 5-வது தளத்துக்கு லிஃப்ட்டில் செல்வது போலத்தான் இருந்தது. எங்களது பயணத்தை 18 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டோம். கிட்டத்தட்ட 2,700 கிமீ-க்கும் அதிகமானது எங்கள் பயணம். இந்த நெடும்பயணத்துக்கு தயாராகவே இரண்டு நாள் முழுதாக தீர்ந்து போனது.
ரைடிங் பூட்ஸில் ஆரம்பித்து 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் குடுவை, பொலராய்ட் கிளாஸ், கிளவுஸ், ஜாக்கெட், காற்றை சமாளிக்க கவசங்கள், புல்லட்டுக்கான கூடுதல் (ஸ்டெப்னி) உதிரிபாகங்கள் என எல்லா மூட்டை முடிச்சுகளோடு 2013-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதியன்று புறப்பட்ட தயாரானோம். இதற்காக பெங்களூரிலிருந்து சண்டீகருக்கு புல்லட்டை ஷிப்பிங் செய்தோம்.
சண்டீகரில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட எங்கள் பயணம், உதம்பூர்-நகர், சோசிலா பாஸ் திராஸ் கார்கில்-புத்கார்போ- லே- பாங்காங்சோ-நுப்ரா-பாங்-கீலாங்-டங்காலங்லா-பருலாச்லா-சாங்க்லா-ரோஹ்டாங் பாஸ் மனாலி- கங்காரா சமவெளி, பதான்கோட்- அமிர்தசரஸ் என 17 நாட்களில் 2,700 கி.மீ தூரத்தை கடந்தோம்.
இந்த பயணத்தின் போது அனல் காற்று, குளிர்க்காற்று, பாலைவனம், குன்று, கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயர மலைகள், ஆபத்தான ஆற்றுப்பாலங்கள் என்று ஏகப்பட்ட அனுபவங்கள் கிடைத்தது. 80 நிமிடத்துக்கு 80 கி.மீ தூரம் பயணிப்பது பின்னர், இடையில் வண்டிக்கும் எங்களுக்கும் 18 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்வது என்னும் 80:80:18 விதியை பின்பற்றினோம்.
சண்டீகரிலிருந்து உதம்பூருக்கு செல்ல 12 மணி நேரம் ஆனது. உதம்பூரிலிருந்து நகர் செல்லும் வரை ஏகப்பட்ட சோதனைகள். 2.5 கிமீ தூரத்திலான நெடும் சுரங்கத்தில் பயணித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. காஷ்மீர் வாசிகளின் வாழ்வாதாரமாக உள்ள தால் ஏரியை விட்டு வெளியேறவே மனமில்லை.
இதையடுத்து குறுகிய ஒற்றையடி பாதையைக் கொண்ட 11,545 அடி உயர சோசிலா பாஸ் வழியாக லடாக்கை அடைந்தோம். லடாக், ஒரு தபால் அட்டை அளவிலான புகைப்படம் போல காட்சி அளித்தது. லடாக்கை தொடர்ந்து உலகிலேயே குளிர்ச்சியான பகுதியான திராஸுக்கு சென்றோம்.
இதற்கடுத்து லே நகருக்கு சென்றோம் லேயின் மொத்த சுற்றளவே 3 கிமீ தான். அதன் தெருக்களில் இந்திய, சீன, இத்தாலிய, திபெத்திய உணவு வகைகள் தாராளமாகவே கிடைக்கின்றன.
இப்படித் தொடர்ந்த எங்கள் பயணம் ஒரு வழியாக மீண்டும் அமிர்தசரஸ் வந்ததும் நிறைவானது. ராணுவக் குடியிருப்புகள், பழங்குடியின மக்களின் குடில்கள்,சாலையோர தாபாக்கள், வெவ்வேறு மனிதர்கள் என்று இந்தியாவின் ஆன்மாவை இந்த பைக் சவாரியில் உணர முடிந்தது. இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு 300 கி.மீ-க்கும் அதனுடைய நிலம் மக்கள், உணவு, மண், காற்று எல்லாம் மாறுதலுக்குள்ளானது.
கார்களை விட இந்திய பைக்குகளே தேசத்தை நுகர வைக்கிறது. இந்த பயணத்தை தொடர்ந்து இலங்கை தமிழர்களின் யாழ்ப்பாணம், திரிகோணமலை போன்ற பகுதிகளில் பைக் ஓட்டவும் திட்டமிட்டுள்ளேன்.
நிச்சயம் பைக் ரைடு என்பது மக்களோடு நம்மை தொடர்புபடுத்தும் கருவி என்பதை உணர வேண்டும் என்றார் சுரேஷ் செல்வராஜ்.
manikandan.m@thehindutamil.co.in