ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் வெளிநாடுவாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் முதலிடத்தையும் லட்சுமி மிட்டல் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆசிய ஊடக மற்றும் சந்தை குழுமம் ஈஸ்டர்ன்ஐ என்ற பெயரில் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து பிரிட்டனில் வசித்து வரும் 101 பேர் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.5.06 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 5.7 சதவீதம் அதிகம்.
இந்தப் பட்டியலில் வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர்களும் சகோதரர்களுமான ஜி.பி.இந்துஜா மற்றும் எஸ்.பி.இந்துஜா முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சுகாதாரம், எரிசக்தி, மின் உற்பத்தி, வாகன உற்பத்தி, நிதி மற்றும் வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல் ஸ்டீல் குழும தலைவர் லட்சுமி மிட்டல் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.90,210 கோடியாக சரிந்துள்ளது. ஸ்டீல் மதிப்பு குறைந்ததே இதற்குக் காரணம். மற்றொரு வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபரும் கபாரோ குழும தலைவருமான ஸ்வராஜ் பால் ரூ.6,742 கோடி சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் 12-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.