வணிகம்

காப்பீட்டுத் துறை வளர்ச்சிக்கு உதவும் மருத்துவக் காப்பீட்டு சலுகை

செய்திப்பிரிவு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு வரிச் சலுகை அதிகரித்துள்ளார். இது காப்பீட்டுத்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் சமூக பாதுகாப்பு அளிக்க முடிவு செய்து அதற்குரிய திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக குறைந்த விலையில் விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் மருத்துவக் காப்பீட்டில் செய்யப்படும் முதலீடுகளில் அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை வருமான வரி சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஓய்வூதிய திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து படி அளவு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வரை அளிக்கப்பட்டு வந்த வருமான வரிக் கழிவு இப்போது ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பு ரூ. 30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இது 20 ஆயிரமாக இருந்தது.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மருத்துவக் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்யாமலிருந்தாலும் ரூ. 30 ஆயிரம் தொகை மருத்துவ செலவாகக் கருதப்பட்டு அவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவு சில குறிப்பிட்ட இனங்களுக்கு ரூ. 20 ஆயிரமாக இருந்தது இப்போது ரூ. 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள மிகக் குறைந்த காப்பீட்டுத் திட்டங்களால் இந்தத் துறை அதிக வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் விபத்து காப்பீட்டுக்கான ஆண்டு பிரீமியம் ரூ. 12 ஆகும். இதற்கான காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாகும். இதேபோல ஜீவன் ஜோதி பீமா என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கான ஆண்டு பிரீமியம் ரூ. 330 ஆகும். இதிலும் காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உள்ளது. காப்பீட்டு சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இரண்டு காப்பீட்டுத் திட்டங்கள் இவைதான்.

காப்பீடு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியை இந்த பட்ஜெட் சிறப்பாகச் செய்துள்ளது. அதிலும் குறைந்த பிரீமியத் தொகையில் காப்பீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இத்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஐசிஐசிஐ லொம்பார்டு பொதுக் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பார்கவ் தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் பலரும் சேரும்போது அதற்குரிய விதிமுறைகளை வகுக்க முடியும்.

மருத்துவக் காப்பீட்டில் அளிக்கப்பட்டுள்ள சலுகை வரம்பு உயர்வு, இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களை மேலும் பலர் எடுக்க வழியேற்படுத்தியுள்ளது என்று மாக்ஸ் பூபா நிறுவனத்தின் உயர் அதிகாரி சோமேஷ் சந்திரா தெரிவித்தார்.

வரிச் சலுகை பெறும் நடுத்தர பிரிவு மக்கள் இந்த வரம்பு உயர்வால் கூடுதலாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை எடுக்க வழியேற்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத் தலைவர் வி. ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.

இந்த அரசு அடல் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சீரான ஓய்வூதியம் அவர்களது பங்களிப்பு எப்படியிருப்பினும் கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தில் சேரும் பொதுமக்களுக்கு அரசின் பங்களிப்பு 50 சதவீதம் போடப்படும். ஆண்டுக்கு ரூ. ஆயிரம் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு போட்டால் அதில் அரசின் பங்களிப்பு இருக்கும். இத்தகைய ஓய்வூதிய திட்ட முதலீடு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட வேண்டும்.

மேலும் ஓய்வூதியத் திட்டங்களில் கூடுதலாக ரூ. 50 ஆயிரம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் என்று பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் ரஸ்தான் தெரிவித்துள்ளார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக உயர்த்தியது தொடர்பான அவசர சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டு சட்டமாக கொண்டு வரப்படும்போது 350 கோடி டாலர் அளவுக்கு அந்நிய முதலீடுகள் வரலாம் என்று பிஎன்பி மெட்லைப் இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் தருண் சௌக் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT