ஸ்கூட்டர்கள் என்றாலே பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கான வாகனம் என்ற நிலை மாறி கல்லூரி செல்லும் மாணவர்களில் ஆரம்பித்து இப்போது அனைத்துத் தரப்பினருக்குமான வாகனமாக மாறிவிட்டது. இதனால் கியர் வண்டிகளுக்கு இணையாக ஸ்கூட்டர்களின் சந்தையும் பெரியளவில் விரிவடைந்துள்ளது.
ஒரு காலத்தில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் அங்கு நிற்கிற இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலனவை கியர் வண்டி களாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி யல்ல. ஆக்டிவா, செஸ்ட், பெப் என்று எல்லா நிறுவன ஸ்கூட்டர்களும் வரிசை கட்டி நிற்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ஸ்கூட்டர்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய கியர் இல்லாத வண்டிகளை ஸ்கூட்டரெட் என்று அழைக்கின்றனர்.
நகர்ப்புறத்தில் வாழும் மேல் நடுத்தர மற்றும் மேல்தட்டு பெண்களுக்கான வாகனமாக இருந்த ஸ்கூட்டர்கள் இன்றைக்கு எல்லோருக்குமானதாக மாறிவிட்டதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளன.
ஸ்டைலிஷான தோற்றம், வேகம், எரிபொருள் சிக்கனம் என கியர் வண்டிகளுக்கு நிகரான பலன்களை தரும் தன்மை போன்றவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.
இதுதான் மக்கள் மத்தியில் ஸ்கூட்டருக்கான வரவேற்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஸ்கூட்டி பெப், ஆக்டிவா, போன்ற ஸ்கூட் டர்களை டி.வி.எஸ், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் தயாரித்து வந்த நிலையில், சூப்பர் பைக் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த யமஹா உள்ளிட்ட நிறுவ னங்கள் கூட ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளன.
கனரக வாகன உலகில் பிரதான சந்தையை கொண்டுள்ள இயங்கி வரும் மஹிந்திரா நிறுவனம் கூட மஹிந்திரா ரோடியோ, கஸ்டோ போன்ற ஸ்கூட்டர்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இன்றைக்கு சந்தைக்கு வருகிற ஸ்கூட்டர்களின் திறன் கியர் வண்டிகளுக்கு இணையாக 120 சிசி முதல் கிடைக்கின்றன. மேலும் லிட்டருக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ. வரை தாராளாமாக மைலேஜ் கொடுக்கின்றன. மஹிந்திரா கஸ்டோ ரூ.49 ஆயிரத்தில் இருந்து ஸ்கூட்டி வெஸ்பா போன்ற ஸ்கூட்டர்கள் ரூ.80 ஆயிரம் விலையில் விற்பனை ஆகின்றன.
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ், வீகோ, ஜுபிட்டர், செஸ்ட், ஸ்ட்ரீக், என பல்வேறு ஸ்கூட்டி மாடல்களை விற்பனை செய்து வரும் டிவிஎஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே, 56,750 ஸ்கூட்டரெட்களை விற் பனை செய்துள்ளது. இது கடந்த ஜனவரியை விட சுமார் 35.15% அதிகமாகும்.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, ஏவியேட்டர், மாடல் கள் இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத்தாண்டி இந்த நிறுவனத்தின் ஹோண்டா டியோவுக்கும் பெரியளவில் வரவேற்பு உள்ளது. இதனால் ஹோண்டா ஸ்கூட்டரின் விற்பனை கடந்த ஜனவரியை விட பிப்ரவரி மாதத்தில் 22.13 % அதிகமாகியுள்ளது. பிப்ரவரியில் விற்பனையான மொத்த எண்ணிக்கை 2,08,811 ஆகும்.
இப்படி ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில், பல்சர் போன்ற சூப்பர் பைக்குகளை தயாரித்து வரும் பஜாஜ் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது ஸ்கூட்டர்களுக்கான வரவேற் பையே காட்டுகிறது.
மஹிந்திரா நிறுவனம் கஸ்டோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது தொடர்பாக அதன் தலைமை இயக்க அதிகாரி விரன் பொப்பிலி கூறும்போது, “ இந்தியா மிகவும் வேகமாக நகர்மயம் ஆகி வருகிறது.
எல்லோரும் சம வாய்ப்புகளை பெற்றுள்ளார்கள். நாங்கள் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், பெருவாரியான நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் குடும்ப பின்புலம் உள்ளவர்கள் ஸ்கூட்டர்களை விரும்புவதை அறிய முடிந்தது. எவ்வளவு நெரிசலான நகரங்கள் என்றாலும் ஸ்கூட்டர்களை மிக நேர்த்தியாக ஓட்டி செல்ல முடியும். கியர் வண்டிகளைப் போல், வேகத்துக்கு ஏற்ப கியரை மாற்றுவது போன்ற தொல்லைகள் இல்லை.
கியர் வண்டிகளுக்கு இணை யாக 110சிசி அளவு திறனுள்ள எங்களது தயாரிப்பு லிட்டருக்கு 63 கிமீ வரை கொடுக்கிறது. பொதுமக்களுக்கு தேவையான இந்த அம்சங்கள் தான் ஸ்கூட்டர் விற்பனைக்கு பெரியளவில் கை கொடுக்கும்” என்றார்.
ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு குறித்து யமஹா மோட்டார்ஸ் இந்தியாவின் விற்பனை பிரிவு துணை தலைவர் குரியன் ராய் கூறியதாவது:
இன்றைய நெருக்கடியான போக்குவரத்து சூழலில், கையாளுவதற்கு எளிதான வாகனங்களை தான் பொதுமக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
எனவே, இதை மக்கள் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் யமஹா ரே, ஆல்பா, மாதிரியான ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் வர்த்தகத்தில் 50% அளவுக்கு ஸ்கூட்டர்கள் விற்பனையாகின்றன.
நகர்ப்புறங்களை தாண்டி கிராமப்புற சந்தையிலும் ஸ்கூட்டர்களை கொண்டு சேர்க்க முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றார்.
manikandan.m @thehindutamil.co.in