பட்ஜெட்டுக்கு பிறகான முதல் வர்த்தக நாளில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி இருக்கின்றன. பெரும்பாலான பங்குச் சந்தை வல்லுநர்கள் இது வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும் பங்குச் சந்தைகள் இன்னும் மேலே உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருப்பதால் பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளன.
கேப்பிடல் குட்ஸ் துறையின் பங்குகள் ஏற்றத்துக்குக் காரணமாக இருந்தது.
சென்செக்ஸ் 97 புள்ளிகள் உயர்ந்து 29,459 புள்ளியிலும், நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 8,956 புள்ளியிலும் முடிவடைந்தது. 9,000 புள்ளிகளை நெருங்கும் நிப்டி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து முடிந்திருக்கிறது. மிட் கேப் 1.56 சதவீதமும் ஸ்மால் கேப் குறியீடு 0.96 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தது.
கேப்பிடல் குட்ஸ் குறியீடு 3.58 சதவீதம் உயர்ந்தது. இதற்கடுத்து ஹெல்த்கேர், வங்கி, மின்சாரம் ஆகிய துறைகள் உயர்ந்து முடிந்தன. மாறாக எப்.எம்.சி.ஜி., கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஆட்டோ ஆகிய துறைகளின் குறியீடுகள் சரிந்து முடிந்தன.
அந்நிய நேரடி முதலீட்டுக்கும், அந்நிய நிறுவன முதலீட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பட்ஜெட்டில் அறிவித்ததால் ஆக்ஸிஸ் வங்கி பங்கு 5.71 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் ஆக்ஸிஸ் வங்கி, சிப்லா, பி.ஹெச்.இ.எல்., எல் அண்ட் டி, மற்றும் ஹெச்.யூ.எல்., நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிந்து முடிவடைந்தன. அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பிப்ரவரி மாத வாகன விற்பனை 36 சதவீதம் உயர்ந்திருப்பதால் இந்த பங்கு 4.5% உயர்ந்து முடிந்தது.
சனிக்கிழமை வர்த்தகத்தில் (பட்ஜெட் அன்று) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 641 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
பஜாஜ் ஆட்டோ, ஐடிசி சரிவு
நேற்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் 4 சதவீதம் சரிந்து முடிந்தது. பிப்ரவரி மாத வாகன விற்பனை 21 சதவீதம் சரிந்ததால் இந்த பங்கு நான்கு சதவீதம் சரிந்து முடிந்தது. சிகரெட் மீதான உற்பத்தி வரி பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது.
இதனால் பட்ஜெட் தினத்திலேயே ஐடிசி பங்கு 11% சரிந்தது. நேற்றைய வர்த்தகத்திலும் இந்த பங்கின் சரிவு தொடர்ந்தது. நேற்று 5.01 சதவீதம் சரிந்து 343 ரூபாயில் இந்த பங்கு வர்த்தகம் முடிந்தது.
ரிலையன்ஸில் எல்.ஐ.சி. முதலீடு
பொதுக் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி. ரிலையன்ஸ் நிறுவனத் தில் 6.78 கோடி பங்குகளை வாங்கி இருக்கிறது. தற்போதைய சந்தை விலையிலே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 25,150 கோடி ரூபாயாகும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே 6.98 சதவீதப் பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருக்கிறது. தற்போதைய முதலீட்டைச் சேர்க்கும் பட்சத்தில் 9.08 சதவீத ரிலையன்ஸ் பங்குகள் எல்.ஐ.சி. வைத்துள்ளது.