நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் என்று பெரும்பாலான தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
அஜய் ஸ்ரீராம்
இந்திய தொழிலகக் கூட்ட மைப்புத் தலைவரான இவர் கூறியதாவது: இது வளர்ச்சிக்கு சாதகமாக பட்ஜெட். இந்த பட்ஜெட் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தவிர பொருளாதார ஏற்றத்துக்கு இந்த பட்ஜெட்டில் அடித்தளம் போடப் பட்டிருக்கிறது. கருப்பு பணத்தை மீட்பதற்கு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு எடுக்கப் பட்டிருக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக் குரியவை. சொத்து வரியை நீக்கி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 2% கூடுதல் வரி விதிக்கப்பட்டது நல்ல முடிவு.
ராஜன் பார்தி மிட்டல்
பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரான இவரது கருத்து:
இது சமச்சீரான பட்ஜெட். வரி தொடர்பான கடினமான விஷயங்களை எளிதாக்க முயற்சித் திருக்கிறார். சொத்துவரியை நீக்கி இருக்கிறார். இந்த பட்ஜெட் மூலம் தொழில்புரிவது எளிதாகும் என்று நினைக்கிறேன்.
ராகுல் பஜாஜ்
இது ஒரு நேர்மறையான பட்ஜெட். இந்த பட்ஜெட்டுக்கு என்னுடைய மதிப்பெண்கள் 90%. இது வளர்ச்சிக்கு சாதகமான பட்ஜெட். கருப்பு பணம் வைத்தி ருப்பவர்களுக்கு 10 வருட சிறை தண்டனை என்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.
ஜோத்ஸ்னா சூரி - பிக்கி
வளர்ச்சிக்கான பாதையை இந்த பட்ஜெட்டில் அருண் ஜேட்லி உருவாக்கி இருக்கிறார். இது நிச்சயம் தொலைநோக்கு பட்ஜெட்தான். கார்ப்பரேட் வருமான வரியை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பது நல்ல முடிவு.
அருந்ததி பட்டாச்சார்யா, தலைவர் - எஸ்.பி.ஐ.
இது வரவேற்கத்தகுந்த பட்ஜெட். எதிர்காலத்துக்கு வளர்ச் சிக்கு தேவையான தெளிவான திட்டமிடல் இருக்கிறது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வர்த்தகத்துக்கு சலுகைகள் கொடுப்பது, கருப்பு பணத்தை மீட்க எடுக்கும் நடவடிக்கை ஆகியவை வரவேற்கத்தகுந்தது.
அதேபோல வீடுகளில் இருக்கும் தங்கத்தை வெளியே எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத் தக்கது.
சாந்தா கொச்சார், நிர்வாக இயக்குநர் - ஐசிஐசிஐ வங்கி:
நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதத்துக்குள் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், வளர்ச்சி விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை. வளர்ச்சி, நிதி சீரமைப்பு, வரி ஆகிய விஷயங்களில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தி இருக்கிறது.
என்.சந்திரசேகரன் - டிசிஎஸ்
இந்தியாவை முதலீட்டுக்கு ஏற்ற நாடாக உயர்த்துவதற்கு பட்ஜெட்டில் துணிச்சலான நடவடிக் கைகளை எடுத்திருக்கிறார்.
ஆதி கோத்ரேஜ், தலைவர் - கொத்ரெஜ் குழுமம்:
கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவித்தது வரவேற்க தகுந்த முடிவு.