வணிகம்

‘பெண் இயக்குநர்களை இம்மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும்’- செபி

செய்திப்பிரிவு

பங்குச்சந்தையில் பட்டியலிட்ட அனைத்து நிறுவனங்களும் இம்மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் (செபி) தெரிவித்துள்ளது.

முன்னணி 500 நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்களில் பெண் இயக்குநர்களே இல்லை என்று செபி தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கம்பெனி விவகார அமைச்சகத்துக்கும் செபி கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும் செபி தெரிவித்திருக்கிறது.

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பெண் இயக்குநர்களை நியமிப்போம் என்றும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறோம் என்று செபியிடம் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

புதிய கார்ப்பரேட் விதிமுறைகள் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும் என்று செபி அறிவித்தது.

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் பெண் இயக்குநர்களை நியமிக்க வேண்டும் என்று செபி தரப்பில் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த காலக்கெடு 2015-ம் ஆண்டு ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஏற்கெனவே ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது என்பதால் செபி இந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறது.

ஒரு வேளை இந்த காலகட்டத்துக்குள் பெண் இயக்குநர்களை நியமிக்கவில்லை என்றால் செபி மற்றும் பங்குச்சந்தை மூலம் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT