ஒரு குறிப்பிட்ட குழுமத்துக்கு கடன் கொடுக்கும் அளவினை குறைத்துக்கொள்ளுங்கள் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஒரு வங்கியின் முதலீட்டில் குறிப்பிட்ட குழுமம்/நிறுவனங்களுக்கு 25 சதவீதத்துக்கு மேல் கடன் கொடுக்க வேண்டாம் பரிந்துரை செய்திருக்கிறது. தற்போது இந்த அளவு 55 சதவீதமாக இருக்கிறது.
வங்கிகளின் ரிஸ்க் அளவினை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த பரிந்துரையை அளித்திருக்கிறது..
இந்த வரைவு வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வரும் என்றும், வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு வங்கியின் பங்குதாரர்களை கேட்டிருக்கிறது.
வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 71,080 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பரில் இந்த கடன் அளவு 2,60,531 கோடியாக அதிகரித்திருக்கிறது.
வங்கிகள் ஒரு நிறுவனத்தில் கூடுதலாக கடன் கொடுப்பதை படிப்படியாக குறைத்துகொள்ள வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது.