ஸ்டேட் பேங்ப் ஆப் திருவாங்கூர் (எஸ்.பி.டி) அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்திருக்கிறது. இந்த வட்டி விகிதம் வரும் 16-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி இரண்டாம் முறையாக வட்டி குறைப்பு செய்த பிறகு, வட்டி குறைப்பினை அறிவித்த முதல் வங்கி எஸ்.பி.டி. ஆகும்.
இதன் மூலம் அனைத்து வகையான கடன்களுக்குமான வட்டி விகிதம் உடனடியாக குறைக்கப்படும்.
ஆனால் இந்த வட்டி குறைப்பு டெபாசிட்களுக்கு பொருந்தாது என்றே தெரிகிறது.
ரிசர்வ் வங்கியில் ஜேட்லி
வரும் 22-ம் தேதி ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உரையாற்றுகிறார். நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத் துவது குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இரண்டு முறை வட்டி குறைப்பு செய்ததை பாரட்டுவதற்காகவும் மேலும் வட்டி குறைப்பு தேவை என்பதை வலியுறுத்துவதற்காகவும் இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பு இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும் என்பதை உணர்த்து வதற்காக சந்திப்பாகவும் இது இருக்கக்கூடும்.
அடுத்த நிதி ஆண்டுக்கான முதல் கடன் மற்றும் நிதிக்கொள்கை கூட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் அருண் ஜேட்லியின் ரிசர்வ் வங்கி சந்திப்பு மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.