வணிகம்

3ஜி கட்டணத்தை 50% ஆக குறைக்க பிஎஸ்என்எல் திட்டம்

பிடிஐ

மொபைல் இன்டர்நெட் சேவைக்கான கட்டணங்கள் அதிகரித்து வரும் சூழலில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தமது 3ஜி டேட்டா கட்டணத்தை 50 சதவீத அளவில் குறைத்திட முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவ், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 3ஜி டேட்டா கட்டணங்களை 50 சதவீதமாக குறைக்கும் வகையிலான விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தற்போது முன்னணி தனியார் நிறுவனங்கள் 2ஜி சேவைக்கு வசூலிக்கும் கட்டண அளவில்தான் பிஎஸ்என்எல் தமது மொபைல் இன்ட்ர்நெட் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை வழங்கி வருவது கவனிக்கத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பேஸ் 7 நெட்வொர்க் விரிவாக்கத் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. பேஸ் 8 நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியுள்ள இந்நிறுவனம், 2015-16 நிதியாண்டின் முதல் கலாண்டில் டெண்டர் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"நாங்கள் 3ஜி கொள்ளளவில் 90 சதவீதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இப்போதே சேவைக் கட்டணத்தைக் குறைத்துவிட்டால், அதனால் திடீரென மிகுதியாக உயரும் டிராஃபிக்கையும் நெட்வொர்க்கையும் சமாளிக்க முடியாமல் போய்விடும். எனவே, பேஸ் 8-க்கு விரிவாக்கம் செய்த பிறகு, 3ஜி கட்டணத்தை குறைத்திட முடிவு செய்துள்ளோம்" என்றார் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவ்.

SCROLL FOR NEXT