முதலீட்டாளர்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் நடத்த ஆர்வம் காட்ட வில்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஏற்கெனவே அங்கு தொழில் நடத்த அனுமதி வாங்கியவர்களும் தொழில் தொடங்காமல் அனு மதியை திருப்பி கொடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ அலுமினியம், பார்ஸ்வநாத் உள்ளிட்ட 57 நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான அனுமதிகளைத் திருப்பிக் கொடுத்துள்ளன.
இது தொடர்பாக வணிக துறை செயலாளர் தலைமையில் இயங்கும் அனுமதி குழு கூட்டம் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனுமதியை திருப்பி அளிக்கும் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
இந்த 57 நிறுவனங்கள் தவிர, வரி இல்லா பகுதிகள் என்று அறிவிக்கபட்ட தகவல் தொழில் நுட்ப பூங்கா, தங்க, வைர ஆபரண பூங்கா, உயிரி தொழில்நுட்பம், ஜவுளி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து 35 விண்ணப்பங்களும் அனுமதியை ரத்து செய்யக்கோரி விண்ணப்பித்துள்ளன.
இந்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான அனுமதி சாதாரணமாக வணிகதுறை மூலமாகவே வழங்கபட்டன என்றும், ஆனால் இதற்கான அனுமதி ரத்து என்பது சம்பந்தப்பட்ட நிறுவனம், அதன் துணை நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு இயக்குநர் பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி குழு முடிவெடுக்கும் என்று கூறியுள்ளது,
பார்ஸ்வநாத் நிறுவனம் இந்தூரில் ஐடி துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 2007 ல் அனுமதி வாங்கியது. ஆனால் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி அங்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மேம்பாட்டு ஆணையர் இதன் அனுமதியை ரத்து செய்வதற்கான பரிந்துரையும், அனுமதியை திரும்ப பெறுவதற்கான அறிக்கையையும் அனுப்பியுள்ளார்.
டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர் நிறுவனம் நொய்டாவில் தொழில்நுட்ப மண்டலம் அமைக்க அனுமதி வாங்கியது. ஆனால் இந்த நிறுவனம் அங்கு தொழிலை மேற்கொள்ளவில்லை. இதற்கு பல்வேறு வழிகளையும் கையாண்டது. இதன்பிறகுதான் மேம்பாட்டு ஆணையர் அனுமதியை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்தார்.
ஜேஎஸ்டபிள்யூ அனுமினியம் ஆந்திரப் பிரதேசத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான அனுமதியை வாங்கியது இதற்காக வாங்கப்பட்ட அனுமதி பிப்ரவரி 2012 க்குள் முடிவடைந்து விட்டது. இந்த விண்ணப்பம் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கையெழுத்து நிலையிலேயே உள்ளது.
இது போன்ற தடைகள் அகற்றப்படுவதற்கான மேம்பாட்டு இயக்குநர் பரிந்துரையின் அடிப்படையில் இந்த திருப்ப விண்ணப்பங்களில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இது தவிர மும்பையில் மூன்று சிறப்பு பொருளாதார மண்டலங்களை மூடுவதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏற்கனெவே 50 முதலீட்டாளர்கள் தங்களது திட்டங்களை திருப்பம் செய்து விட்டனர்.
நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றுவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான். ஆனால் இந்த மண்டலங்களில் குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் லாப விநியோக வரி செலுத்த வேண்டும் என்கிற சட்டத்துக்குப் பிறகுதான் பல்வேறு நிறுவனங்கள் வெளியேறத் தொடங்கின.
தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ குறைந்தபட்ச மாற்று வரியை குறைக்க வேண்டும் என்றும், அப்படி குறைத்தால் முதலீடு உயர வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலிருந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்கிற புள்ளி விவரங்கள்படி 2005 கால கட்டத்தில் ரூ.22,840 லட்சம் என்கிற அளவில் ஏற்றுமதி இருந்துள்ளது. இது 2013-14 நிதி ஆண்டில் ரூ.4.94 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.