பொதுத்துறை காப்பீட்டு நிறுவன மான எல்.ஐ.சி., முன்னணி ஐ.டி நிறுவனமான இன்ஃபோஸிசில் தன்வசம் இருக்கும் பங்குகளை குறைத்தது. இதன் மூலம் 850 கோடி ரூபாய் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தையில் கணிசமாக முதலீட்டை செய்துவரும் நிறுவனம் எல்.ஐ.சி. இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 3.71 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இது ஜனவரி - மார்ச் காலாண்டில் 3.25 சதவீதமாக குறைத்துவிட்டது.
கடந்த சில காலாண்டுகளாகவே இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டை குறைத்துக்கொண்டே வந்தது எல்.ஐ.சி. கடந்த 2012 ஜூன் மாதத்தில் 6.72 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருந்தது.
அந்நிய முதலீடு அதிகரிப்பு
எல்.ஐ.சி. பங்குகளை குறைத்த அதே நேரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை அதிகரித் திருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாத முடிவில் 40.65 சதவீதமாக இருந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு, மார்ச் காலாண்டில் 42.10 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
இந்த நிலைமையில் இன்ஃபோ ஸிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் இன்று (செவ்வாய் கிழமை) வெளியாக இருக்கின்றன.
வருமானம் குறையும்
முன்னதாக கடந்த மாதம் நிறுவனத்தின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மந்தமான வருமானமே இருக்கும் என்று இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.டி. சிபுலால் தெரிவித்தார். மேலும் நடப்பு நிதி ஆண்டிலும் இதே நிலைமை தொடரும் என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.