தொழில்முனைவோர், வென்ச்சர் கேபிடலிஸ்ட், பண்ட் மேனேஜர் என வெவ்வேறு முகங்களை அடையாளம் காட்டி, அவர்களின்ஆலோசனைகள், கருத்துகளை தொடர்ந்து வாசகர்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறோம். அந்த வரிசையில் இப்போது கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன்.
ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின் நிதிப் பிரிவில் உதவிப் பேராசிரியர். பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட பி.ஜே. நாயக் கமிட்டியின் உறுப்பினரும்கூட. திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு மத்திய பிரதேசத்தில்; கான்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங். ஐஐஎம் கொல்கத்தாவில் எம்பிஏ படித்தவர்.சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றியிருக்கிறார்.
ஐஐஎம் கொல்கத்தாவில் ஒரு எம்பிஏ அமெரிக்காவில் ஒரு எம்பிஏ எதற்காக?
“இங்கே எம்பிஏ படித்தால் இந்திய சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். சர்வதேச அளவிலான அறிவும் அனுபவமும்தேவைப்பட்டது. அதற்காகவே அமெரிக்காவில் எம்பிஏ படித்தேன். அதுமட்டுமல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வதைவிட பேராசிரியர் ஆக விரும்பியதும்இரண்டாவது எம்பிஏ படிக்க ஒரு காரணம். கார்ப்பரேட்களில் வேலை செய்தாலும், சொந்தமாக தொழில் தொடங்கினாலும் பணம்தான் பிரதானமாக இருக்கும்.
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவோ மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கவோ முடியாது. அதையும் ஆண்டு முழுக்க செய்ய முடியாது. ஏற்கெனவே கண்டுபிடித்ததை சொல்லிக்கொடுப்பதை தாண்டி, புதிதாக ஆராய்ச்சிக்கு நேரம் செலவு செய்ய வேண்டும் என்றால் பேராசிரியர் பணிதான் சிறந்தது. அதுவும் ஒருவகையில் தொழில்முனைவோருக்கான பணிதான். அவர்கள் பொருட்களை விற்கிறார்கள், நாங்கள் ஐடியாக்களை விற்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.
பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 51 சதவீதத்துக்கும் கீழ் இருக்க வேண்டும் என்று பி.ஜே.நாயக் கமிட்டி பரிந்துரையில் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், சேவை எண்ணம் குறைந்து லாபம் நோக்கம் அதிகரிக்குமே?
அரசின் பங்கு அதிகமாக இருக்கும் நிறுவனங்களில், ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக இருக்கிறது. அதுவே ஊழலுக்கு வழிவகுக்கிறது. மேலும், அரசின் தலையீடு இருப்பதால் பொதுத்துறை வங்கியின் இயக்குநர் குழு திறம்படசெயல்பட முடிவதில்லை.வங்கிகளுக்கான விதிமுறையை உருவாக்கும் இடத்தில் இருக்கும் நிதித்துறை செயலாளருக்கு, வங்கித்துறையில் நேரடி அனுபவம் இருப்பதில்லை.எல்லாவற்றுக்கும் மேலாக,லாப நோக்கம் என்பது தவறு கிடையாதே.
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறதே. இதை உயர்த்த பரிசீலிக்கப்பட்டதா?
கமிட்டிக்கான பணிகளில் அதுபற்றி சொல்லப்படவில்லை. அதனால்பரிசீலிக்கப்படவில்லை.ஆனால், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பது மட்டும்நிச்சயம். அப்போதுதான் தகுதியான, திறமையான பணியாளர்களை ஈர்க்க முடியும்.
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகள் பிரிக்கப்பட்டுள்ளனவே. இதனால் என்ன நன்மை?
இரண்டு பதவிகளுக்குமான பொறுப்புகள் வேறு. தலைவர் என்பவர் இயக்குநர் குழுவை நிர்வகிப்பவர், உத்தி சார்ந்த முடிவுகளை எடுப்பவர். ஆனால் நிர்வாக இயக்குநர், அன்றாட பணிகளைக் கவனிக்க வேண்டியவர். இரண்டு வெவ்வேறு பணிகளை ஒரே நபர் கவனிக்கும்போது கண்டிப்பாக செயல்பாடுகளில் பாதிப்புஏற்படும். எனவே, பதவிகளை பிரித்தது மிகவும் நல்லதே. அதற்காக வங்கித் தலைவர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளும் வங்கி அனுபவம் இல்லாதவர்களும் நியமிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சிறியதே அழகு என்பார்கள். ஆனால், வங்கிகளை இணைத்து சர்வதேசஅளவிலான பெரிய வங்கி ஒன்றை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்திருக்கிறதே?
சிறியதே அழகாக இருக்கலாம்;சிறப்பாக செயல்படும் என்ற அர்த்தம் கிடையாது. அழகும், செயல்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சர்வதேச அளவில் முதல் நூறு வங்கிகளை எடுத்துக்கொண்டால், அதில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வங்கிகூட இல்லை. இந்திய நிறுவனங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து நிற்கின்றன. அவர்களுக்கு கடனோ, வங்கிப் பலன்களையோ தர வேண்டுமென்றால் சர்வதேச அளவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வங்கி இருக்க வேண்டும்.
வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருப்பதால் மட்டுமே பணவீக்கம் குறைந்துவிடுமா?
வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருப்பதால் மட்டுமே பணவீக்கம் குறைந்துவிடாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. சுதந்திரத்துக்கு பிறகு மோசமான ஆட்சியை தந்தது யூபிஏ அரசுதான். பல விஷயங்களில்தவறான அணுகுமுறையைக் கையாண்டார்கள். குறிப்பாக, உணவுப் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தி உயர்த்தியே கெடுத்தார்கள்.
கிராமங்களில் இந்தியா வாழ்கிறது. 50 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள் என்கிறபோது குறைந்தபட்ச விலையை உயர்த்தியது எப்படி தவறாகும்?
இது அரசியல்வாதிகள் மட்டுமே வைக்கும் வாதம். குறைந்தபட்ச விலை உயர்வினால் பெரிய விவசாயிகள் மட்டுமே பலன் அடைந்தார்கள். தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மண்டிகளில் கிடைத்த விலைக்கு விற்று விடுவதுதான் சிறிய விவசாயிகளின் வழக்கம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் காரணமாக சம்பளம் அதிகரித்தது. இவை இரண்டும் பணவீக்கத்தில் 70 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. மீதமுள்ள 30% மட்டுமே வட்டி விகிதம்.
இந்த பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.?
முதலாவது. குடிமக்களுக்கான வரிச்சலுகைகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரி குறித்த அறிவிப்புகள். வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். தனியார் முதலீடுகள் பெரிய அளவில் இல்லை என்பதால், அரசின் செலவுகள் அதிகரிக்கப்படும். இதனால் அடுத்த வருடம் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு இருக்கும்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய வங்கித்துறைகள் பலமாக இருப்பதாக சொல்வது பற்றி?
இது தவறான புரிதல். அடுப்பு எரிந்தால்தான் சாப்பாடு. அடுப்பே எரிக்காமல் நெருப்பே படாமல் சாப்பாடு வருமா? அதேபோலதான் இந்திய வங்கித்துறையும்.ரிஸ்க் எடுத்தால்தான் சாதிக்க முடியும். ரிஸ்க்கே எடுக்கவில்லை.. பாதிப்பும் இல்லை.
உலகில் பல பொருளாதார அமைப்புகள் உள்ளன.வளர்ச்சிக்கு எது சரியானது என்று நினைக்கிறீர்கள்?
கேபிடலிசம், கம்யூனிசம், சர்வாதிகாரம் என தனித்தனியாக இருந்தாலும், கேபிடலிஸம் + ஜனநாயகம் சேர்ந்த அமைப்புதான் மற்றவற்றை விட சிறந்தது. உதாரணத்துக்கு 1991-ம் ஆண்டுக்கு முந்தைய இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது சோஷலிசம் + ஜனநாயகம் இருந்தது. அந்த சமயத்தில் வளர்ச்சி மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் அதற்குப் பிந்தைய காலங்களில் கேபிடலிசமும் ஜனநாயகமும் இணைந்து செயல்படத் தொடங்கியது.கேபிடலிசம் எங்கேயாவது தவறு செய்யும் போது ஜனநாயகம் மூலம் அந்த அரசை தூக்க முடியும். இதுமாதிரியான அமைப்புதான் உலகின் பல நாடுகளில் சிறப்பாக இருக்கிறது.
karthikeyan.v@thehindutamil.co.in