தமிழகத்தில் பாரதிய மகிளா வங்கியின் 4 கிளைகள் தொடங் கப்பட உள்ளதாக அந்த வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்ரமணியன் தெரிவித்தார்.
இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைதலை ஊக்குவித்து அவர்களை தொழில் முனைவோராக உருவாக்கு வதற்காக, பாரதிய மகிளா வங்கி மற்றும் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பாரதிய மகிளா வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான உஷா அனந்த சுப்ரமணியன் மற்றும் பாரதிய யுவசக்தி அறக்கட்டளையின் நிர்வாகியான லஷ்மி வெங்கடேசன் ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது உஷா அனந்த சுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த ஒப்பந்தம் மூலம் வேலை தேடும் இளைஞர்களை வேலை வழங்கும் இளைஞர்களாக மாற்ற முடியும். மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பொருளாதார மற்றும் சமூக அளவில் பின்தங்கிய இளைஞர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எங்கள் வங்கியின் மூலம் கடனுதவி பெற்று சொந்தமாக தொழில் தொடங்கலாம்.
ரூ.50 லட்சம் வரை தொழிற்கடன் தவணைக் கடனாகவோ, பண கடன் வரம்பாகவோ, தேவை அடிப்படையில் மூலதன வரம் பாகவோ அல்லது இம்மூன்றும் ஒருங்கிணைந்த கடனாகவோ வழங்கப்படும். தொழில் வகை மற்றும் பணப்புழக்கத்தை அடிப் படையாகக் கொண்டு தொழிற் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 முதல் 7 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்படும்.
ரூ.1,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கிக்கு தற்போது நாடு முழுவதும் 45 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூரில் இரண்டு கிளைகள் உள்ளன. மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய நான்கு ஊர்களில் புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளன.
இதில், மதுரை, திருச்சி கிளைகள் வரும் மார்ச் மாதத்திற்குள்ளும் மற்ற இரு கிளைகளும் அடுத்த நிதியாண்டிலும் திறக்கப்படும். மகிளா வங்கியில் 80 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் ஆண்களுக்கும் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு உஷா அனந்த சுப்ரமணியன் கூறினார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் உள்பட நான்கு பேருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டது.