வணிகம்

சேவை துறையில் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்

செய்திப்பிரிவு

சேவை துறை ஏற்றுமதியை அதிகரிக்க, இந்த துறையில் இருக்கும் தடைகளை களைய வேண்டும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சேவை துறை குறித்து நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் ஆலோசித்த பிறகு இவ்வாறு தெரிவித்தார்.

உடனடியாக இந்த துறையில் இருக்கும் தடைக்கற்களை கண்டறிந்து, அதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.மேலும் சேவைத் துறை சிறப்பாக செயல்பட்டால்தான் மேக் இன் இந்தியா முழக்கம் வெற்றி பெறும். சேவை சிறப்பாக இருக்கும் போதுதான் குறைவான செலவில் பொருட்களை நாம் ஏற்றுமதி செய்ய முடியும். தவிர இந்திய ஜிடிபியில் சேவை துறையின் பங்களிப்பு 57 சதவீதமாக இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 3.24 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சிக்கு சேவை துறை பெரும் பங்காற்றி இருக்கிறது. நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை தவிர சேவை துறை நாட்டுக்கு பல நல்ல விஷயங்களை செய்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த துறை மூலம் நாட்டுக்கு கிடைக்கிறது என்றார்.

சர்வதேச தரமுள்ள பணியாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். சமீபத்தில் மியான்மருக்கு சென்ற போது அங்கு உள்ள மருத்துவமனைகளில் இந்திய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வந்ததை குறிப்பிட்டார்.

சேவை துறையை ஊக்குவிக்க வரும் ஏப்ரல் 23 முதல் 25-ம் தேதி வரை சர்வதேச சேவை துறை கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. வர்த்தக அமைச்சகம், இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் சேவை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் ஆகியவை சேர்ந்து நடத்துகின்றன.

SCROLL FOR NEXT