உலகில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்கும் டொயோடா நிறுவனம் ஹைட்ரஜனில் ஓடும் கார்களைத் தயாரித்துள்ளது. செடான் வகையைச் சேர்ந்த இந்த காருக்கு `மிராய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 700 கார்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
அடுத்த ஆண்டில் 2 ஆயிரம் கார்களையும் அதைத் தொடர்ந்து 2017-ல் 3 ஆயிரம் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
`பியூயல் செல்’ எனப்படும் பேட்டரி மூலம் இது இயங்கக் கூடியது. அதாவது ஹைட்ரஜன் மூலம் கிடைக்கும் சக்தி பேட்டரியில் சேமிக்கப்பட்டு அதன் மூலம் இது இயங்கும்.
ஜப்பானில் உள்ள மிடோமாச்சி ஆலையில் இந்த கார்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த கார் செயல்படும்போது சூழலை பாதிக்கும் கரியமில வாயு வெளியேறாது. சிறிதளவு தண்ணீர் மட்டுமே வெளியேறும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
ஒரு முறை வாயு நிரப்பப்பட்டால் இது 650 கி.மீ. தூரம் செல்லும். வழக்கமான பேட்டரியால் செயல் படும் காரை விட மூன்று மடங்கு அதிக தூரம் செல்வதுதான் இதன் சிறப்பம்சமாகும்.
முதலாவது மிராய் காரை ஜப்பான் பிரதமர் அலுவலகத்துக்கு டொயோடா அளித்துள்ளது.
இந்த வகை கார்களுக்கு ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் சேர்வதால் ஏற்படும் ரசாயன மாற்றம் நிகழ்வதன் மூலம் பேட்டரிக்கு மின் சக்தி கிடைக்கும்.
இதில் இந்த கார் ஓடும். ரசாயன மாற்றத்தால் வெறும் தண்ணீர் மட்டுமே வெளியேறும். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
நிசான், ஹோண்டா உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதுபோன்ற சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத கார்களைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளன.
இந்நிறுவனங்கள் இத்தகைய கார் தயாரிப்பு ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டு மட்டும் 2,400 கோடி டாலர் தொகையை ஒதுக்கியுள்ளன.