வணிகம்

சூரிய மின் உற்பத்தி திட்டம்: ரூ.60 ஆயிரம் கோடி முதலீடு செய்ய என்டிபிசி முடிவு

பிடிஐ

மத்திய அரசு நிறுவனமான தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் (என்டிபிசி) நிறுவனம் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களில் ரூ. 60 ஆயிரம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரிய மின் உற்பத்தி மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்வதாக அரசிடம் என்டிபிசி உத்திரவாதம் அளித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு ரூ. 60 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மிகப் பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு ரூ. 6 கோடி முதலீடு தேவைப்படுகிறது.

என்டிபிசி நிறுவனம் அனல் மின் நிலையங்கள் மூலம் 43 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அத்துடன் சூரிய மின் உற்பத்தி நிலையம் மூலம் 10 ஆயிரம் மெகாவாட்டை உற்பத்தி செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

தற்போது இந்நிறுவனம் மரபு சாரா எரிசக்தி மூலம் 110 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 100 கோடி யூனிட் மின்சார உற்பத்தி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியுடன் ரூ. 10 ஆயிரம் கோடி கடன் திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோல பாங்க் ஆப் பரோடாவுடன் ரூ. 2 ஆயிரம் கோடி கடன் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒவ்வொன்றும் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலான மின் திட்டப் பணிகளுக்கான டெண்டரை இந்நிறுவனம் கோரியுள்ளது. ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இவை அமைய உள்ளன. மேலும் ஆந்திரத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை கூடுதலாக அமைக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதி 250 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அடுத்த மாத இறுதியில் உற்பத்தியை தொடங்க உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு தேவையான நிலம் கிடைப்பது குறித்து குஜராத், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆய்வு நடத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT