வணிகம்

நிதிக்குழு பரிந்துரையால் தமிழக நிதிச் சுமை அதிகரிக்குமா?

செய்திப்பிரிவு

நிதிக்குழு அளித்துள்ள பரிந்துரை காரணமாக மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கும் பகிர்வுத் தொகை அதிகரித்த போதிலும், தமிழகத்துக்கு கடந்த ஆண்டை விட ஒதுக்கீடு குறையும் என தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையால் சிக்கித் திணறும் தமிழக அரசுக்கு இது மேலும் சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது.

மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டியதை வரையறுப்பதற்காக நிதிக் குழு அமைக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் குழு தனது பரிந்துரையை அளிக்கும்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டி தலைமையில் 14-வது நிதிக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பரிந்துரையை நேற்று முன் தினம் மத்திய அரசிடம் அளித்தது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோடு பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இக்குழு தனது அறிக்கையில் மத்திய அரசு வசூலிக்கும் வரி வருமானத்தில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கலாம் என பரிந்துரைத்திருந்தது. முந்தைய ஆண்டு 32 சதவீதமாக இது இருந்தது. மாநில அரசுகளுக்கு கிடைக்கும் அளவு 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ. 5.26 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டில் மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருவாய் பங்கு அளவு ரூ. 3.48 லட்சம் கோடியாகும்.

அளவு அதிகரித்ததால் தமிழகத்துக் கும் கூடுதலாக நிதி கிடைக்கும் என்றிருந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது. வரி பகிர்வில் கடைப்பிடிக்கப்பட்ட முறை காரணமாக தமிழகத்துக்கான ஒதுக்கீட்டு அளவு குறைந்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியர் இராம. சீனுவாசனிடம் கேட்ட போது அவர் அளித்த விவரம்:

பொதுவாக மத்திய அரசின் மொத்த வரி வருமானத்தில் 30 மாநிலங்களுக்கு எப்படி பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் கூடுதலாக அளிக்கலாம் என நிதிக்குழு பரிந்துரைத்தது. மத்திய வரி வருமானத்தில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம் என்ற நிதிக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் இதை எப்படி பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதற்காகப் பின்பற்றப் படும் பார்முலா காரணமாக தமிழக அரசுக்கான ஒதுக்கீடு குறைந்துள்ளது.

பொதுவாக மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் அதாவது 1971-ம் ஆண்டு நிலவரப்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வரையறை நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமே சில மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடு முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்றும் அவ்வாறு கணக்கிட்டால் அதற்கு 1971-ம் ஆண்டை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

ஆனால் 14-வது நிதிக்குழு தனது பரிந்துரையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 17.5 சதவீதத்தை அளிக்கலாம் என்றும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 10 சதவீதத்தை அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி பார்க்கும்போது பிஹார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.

தமிழகத்துக்கு சேவை வரி தவிர்த்த வரி வருமானத்தில் 4.023 சதவீதமும், சேவை வரியில் 4.104 சதவீதமும் கிடைக் கும். அதேசமயம் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு முறையே 18.205 சதவீதம் மற்றும் 17.959 சதவீதமும் கிடைக்கும்.

மேலும் முன்னேறிய மாநிலம், தனி நபர் வருமானம் உள்ளிட்ட அளவீடு களின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவும் தமிழகத் துக்குப் பாதிப்பாக அமைந்துள்ளது என்று பேராசிரியர் சீனிவாசன் குறிப்பிட்டார்.

தீர்வு என்ன?

ஒதுக்கீடு குறைந்தது குறித்து தமிழக அரசு நாடாளுமன்றத்தில் வாதிட்டு அல்லது சண்டை போட்டுத்தான் பெற வேண்டும். ஒருவேளை 2011 மக்கள் தொகை அடிப்படை கணக்கீடாக எடுத்துக் கொண்டால், அதில் மற்றொரு பரிந்துரையும் உள்ளது. அதாவது குறிப்பிட்ட பகுதியில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருந்தால் அதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

அந்த அடிப்படையிலும் தமிழகம் வாதிடுவதற்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் விகிதம் அதிகரித்திருந்தாலோ அல்லது முதியோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலோ அதற்காக கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி தேவை என வாதிடலாம்.

இந்த மாற்றத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ளவில்லை என்றும் இது நிதிக்குழுவின் வரம்பு மீறிய செயல் என்றும் தமிழகம் வாதிட்டு உரிய பங்கை பெற முடியும் என்று பேராசிரியர் சீனுவாசன் குறிப்பிட்டார்.

முன்னேறிய மாநிலம் என்றாலும் இங்கு சில சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிடலாம். இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் தான் முன்னேற முடியும் என்றும் வாதிட லாம் என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.

நிதிக்குழு பரிந்துரையால் கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கும் என்றிருந்த நிலை மாறி, கடந்த ஆண்டை விட குறையும் என்பது தமிழகத்துக்கு பேரிடியாகத்தான் இருக்கும். ஏற்கெனவே ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் சுமை உள்ள நிலையில் வரி பங்கும் குறைவது தமிழகத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

பிஹார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.

SCROLL FOR NEXT