கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், இப்போது தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 290 புள்ளிகள் உயர்ந்து 29095 புள்ளியிலும், நிப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 8806 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் உயர்ந்தே முடிந்தன.
வியாழன் அன்று பணவீக்க குறியீடுகள் வந்தன. இவை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த இலக்கிற்குள்ளே இருந்ததால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. மேலும், டெல்லி தேர்தலில் பாஜக தோற்றதால் பொருளாதார சீர்திருத்தங்களில் எந்த தொய்வும் இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். இதனால் வரும் பட்ஜெட்டில் சீர்திருத்தங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, எஸ்.பி.ஐ. வங்கியின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
வரும் பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் பட்சத்தில், சந்தையில் இன்னும் ஏற்றம் இருக்கும் என்று இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் பங்குச்சந்தை ஆராய்ச்சி பிரிவு தலைவர் தல்ஜித் எஸ்.கோலி தெரிவித்தார். கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீட்டை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தே முடிவடைந்தன. எப்.எம்.சி.ஜி. குறியீடு 1.77%, ஹெல்த்கேர் 1.56%, வங்கி 1.32% மற்றும் ஆட்டோ துறை குறியீடு 1.06 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தன.
ரியால்டி குறியீடு 0.95 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. சென்செக்ஸ் பங்குகளில் எஸ்.பி.ஐ., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிசிஎஸ், கோல் இந்தியா மற்றும் ஐடிசி ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்து முடிந்தன. மாறாக கெயில் இந்தியா, பி.ஹெச்.இ.எல்., ஓ.என்.ஜி.சி., ஹெச்.டி.எப்.சி வங்கி மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன. இதற்கிடையே வியாழன் வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 406.28 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.