நாடு முழுவதும் 3,438 ரயில்வே கிராசிங்குகளை அகற்ற ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6,581 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் விபத்துகள் நேரிடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளையும் படிப்படியாக அகற்ற ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் முதல்கட்டமாக தற்போதைய பட்ஜெட்டில் 3,438 ரயில்வே கிராசிங்குகள் நீக்க ரூ.6,581 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ரயில்வே கிராசிங்குகளில் 917 மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மீதமுள்ள இடங்களில் கண்காணிப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் ஒலி-ஒளி எச்சரிக்கை கருவிகளை நிறுவவும் முடிவு செய்யப்படுள்ளது. மேலும் கான்பூர் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ரேடியோ அலையை அடிப்படையாகக் கொண்ட எச்சரிக்கை கருவிகளை நிறுவும் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.