இ-காமர்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடி கொடுப்பதன் மூலம் விற்பனை செய்துவருவதால் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து வருகிறார்கள். தள்ளுபடி உத்தியை வைத்து மட்டும் நீண்ட காலத்துக்கு தொழில்நடத்த முடியாது என்று பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (பி.டபிள்யூ.சி.) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த நிறுவனங்கள் தள்ளுபடி அறிவித்தன. ஆனால் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளவும் நீண்ட கால செயல்பாட்டுக்கும் தள்ளுபடி சலுகை மட்டுமே போதாது என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தள்ளுபடியை தாண்டி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்குவதன் மூலமே நீண்ட காலம் தொழிலில் நிலைத்து நிற்கமுடியும்.
வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஆய்வில் பாதிக்கும் மேற் பட்டவர்கள் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் தள்ளுபடியால் மட்டுமே இந்த நிறுவனங்களில் வாங்குகிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த துறையில் வந்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் புதிய நிறுவனங்கள் என்பதால் சந்தையை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி வழங்குகிறார்கள். இந்த தள்ளுபடி காரணத்தால் மட்டுமே கடைகளில் வாங்குவதை விட ஆன்லைனில் மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள்.
மக்களின் பழக்கம் மாறி விட்டால் வருடம் முழுவதும் தள்ளுபடி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் பிடபிள்யுசி நிறுவனம் தெரிவித் திருக்கிறது. அதே சமயத்தில் அதிக விலை பொருட்களின் விற்பனையில் இகாமர்ஸ் நிறுவனங்கள் பெரும் தாக்கதை ஏற்படுத்த வில்லை. மேலும் இந்த நிறுவனங் களின் மதிப்பீடுகள் உயர்ந்து வருகின்றன.
அதனால் இதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்கள். அதனால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தள்ளுபடியை குறைத்து கொண்டு லாப பாதைக்கு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பி.டபிள்யூ.சி. நிறுவனம் தெரிவித்திருக்கிறது.