வணிகம்

காலாண்டு முடிவுகள்: எஸ்.பி.ஐ, எம் அண்ட் எம், செயில்

செய்திப்பிரிவு

எஸ்.பி.ஐ. நிகர லாபம் 30% உயர்வு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்.பி.ஐ) டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 30 சதவீதம் உயர்ந்து 2,910 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,234 கோடி ரூபாயாக இந்த வங்கியின் நிகர லாபம் இருந்தது.

வங்கியின் மொத்த வருமானமும் நன்றாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 39,067 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 43,784 கோடி ரூபாயாக இருக்கிறது. வட்டியில்லாத வருமானம் உயர்ந்ததால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. நிகர வட்டி வருமானம் 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

எம் அண்ட் எம் நிகர லாபம் ரூ.930 கோடி

இந்தியாவின் முக்கியஆட்டோ நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 930 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,320 கோடி ரூபாய் அளவுக்கு இதன் நிகர லாபம் இருந்தது.

இதேபோல நிகர விற்பனையும் சரிந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 20,679 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 18,371 கோடி ரூபாயாக இருக்கிறது. தன்னுடைய துணை நிறுவனத்தை கடந்த காலாண்டில் இணைத்ததால், இந்த காலாண்டு முடிவுகளை சென்ற வருடத்தின் முடிவுகளோடு ஒப்பிட முடியாது என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

செயில் நிகர லாபம் 9% உயர்வு

பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 8.6 சதவீதம் உயர்ந்து 579 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 533 கோடி ரூபாயாக இதன் நிகர லாபம் இருந்தது. உற்பத்தியை அதிகரித்தது, மூலப்பொருட்கள் விலை குறைந்தது ஆகிய காரணங்களால் நிகர லாபம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு ஒரு டன் 115 டாலராக இருந்தது இப்போது 65% சரிந்துவிட்டது. லாபம் உயர்ந்தாலும் விற்பனை 3 சதவீதம் குறைந்தது. இயக்குநர் குழு 17.5 சதவீத இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

SCROLL FOR NEXT