மும்பை பங்கு பரிவர்த்தனை வாரியம் (பிஎஸ்இ) குஜராத் மாநிலத்தில் சர்வதேச பங்குச் சந்தை மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் அமைய உள்ள கிஃப்ட் நகரில் இந்த மையம் அமைக்கப்படும். குஜராத் மாநிலம் உருவாக்கும் இந்த நகரில் அமைய உள்ள முதலாவது சர்வதேச நிதிச் சேவை மையமாக (ஐஎப்எஸ்சி) இது இருக்கும்.
இந்த புதிய பரிவர்த்தனை மையத்தின் மூலம் வர்த்தகம், பங்கு பரிவர்த்தனை வர்த்தக முடிப்பு, பொருள் பேரம், கரன்சி பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச முதலீட்டாளர்கள் மின்னணு முறையில் மேற்கொள்ள முடியும்.
இது தொடர்பாக பிஎஸ்இ மற்றும் குஜராத் நிதி டெக்-சிட்டி (கிஃப்ட்) சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வைப்ரண்ட் குஜராத் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி பிஎஸ்இ அமைப்பு சர்வதேச பங்குச் சந்தை வர்த்தகத்துக்கான வசதிகளை கிஃப்ட் நகரில் ஏற்படுத்தும். இது பன்முக சிறப்புப் பொருளாதார மண்டலமாகும். இந்தியாவில் உருவாக்கப்படும் முதலாவது சர்வதேச நிதிச் சேவை மையமாகும்.
இதை குஜராத் சர்வதேச நிதி டெக் சிட்டி நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஹாங்காங், சிங்கப்பூர், துபாய், லண்டன் உள்ளிட்டவற்றில் செயல்படுவது போன்ற சர்வதேச நிதி சேவை கிஃப்ட் சிட்டியில் உருவாக உள்ள மையத்தில் கிடைக்கும் என்று பிஎஸ்இ-யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.