நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.
உற்பத்தித் துறையில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பான 4.1 சதவீத அளவுக்குள் பற்றாக்குறை இருக்கும். அரசின் வரி வருவாய் இன்னமும் இலக்கை எட்டவில்லை என்றபோதிலும் உற்பத்தித் துறை வளர்ச்சியடைவதால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.
டாலருக்கு நிகராக சர்வதேச அளவில் வலுவிழக்காமல் உள்ள கரன்சிகளில் ரூபாயும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக பன்னாட்டு கரன்சிகள் மதிப்பை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வாரத்தில் பல விஷயங்களை தான் அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சமீப நாட்களில் எனது உள்ளுணர்வு மூலம் அறிந்து கொண்டது, இந்தியாவில் அனைத்து விஷயங்களும் சீராக செல்கின்றன என்பதுதான்.
மிகவும் தேக்க நிலை நிலவிய கடந்த மூன்று ஆண்டுகளிலிருந்து நிலைமை மாறி வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதேசமயம் சர்வதேச அளவில் போட்டியிடும் அளவில் பொருளாதார சூழல் சரியாக இல்லை என்று குறிப்பிட்டார்.
பிரேசில் மற்றும் தென்னாப் பிரிக்கா ஆகிய நாடுகள் இப்போது பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளன. தேக்க நிலை யிலிருந்து மீள்வதற்கு ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 9 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சியை சீனா தொடர்ந்து பராமரித்து வருகிறது. இப்போது சீன பொருளாதாரமும் புதிய பரிமாணத்தை நோக்கி செல்கிறது என்று சுட்டிக் காட்டினார்.
நடப்புக் கணக்கு பற்றாக் குறையைப் பொருத்தமட்டில் இப்போது நிலைமை திருப்திகரமாக உள்ளது என்றார்.
தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் பற்றாக்குறை ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் 2.1 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 10,000 கோடி டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான வரி விதிப்பு முறையை உருவாக்குவதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
நமது அரசு நிர்வாகத்தில் இரண்டு விஷயங்கள்தான் பெரும் பிரச்சினை. அதைத்தான் முதலீட்டாளர்களும் உற்று நோக்குகின்றனர். முதலாவது முடிவெடுப்பதில் அநாவசிய காலதாமதம், நமது கொள்கை வகுப்பதில் ஸ்திரமற்ற நிலை ஆகியனதான். சர்வதேச அளவில் பெரும்பாலோர் தெரிவிப்பது நமது நிர்வாக நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருப்பது தான். அரசு நிர்வாக ரீதியிலான ஒப்புதல்கள் கிடைப்பதில் அதிக கால தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.
நானும் பிரதமர் மோடியும், வரிச் சுமையற்ற தொழில் சூழலை உருவாக்க பாடுபடுகிறோம். இதன்மூலம்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும். அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் வந்திருந்த தொழில்துறை தலைமைச் செயல் அதிகாரிகள் இதே கருத்தைத்தான் தெரிவித்தனர் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், வரி செலுத்துவோர் கட்டாயம் செலுத்தியாக வேண்டும். வரி செலுத்த வேண்டியவர் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்ற அவர், வரி மதிப்பீடு மிகவும் நேர்மையானதாக மேற்கொள்ளப்படும் என்றார்.