வணிகம்

சர்க்கரை மீதான வாட் வரியை நீக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

சர்க்கரை மீதான வாட் வரியை (மதிப்பு கூட்டு வரி) நீக்க வேண் டும் என தமிழக அரசுக்கு தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கத்தின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சர்க்கரை ஆலைகள் தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளன. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான உற்பத்தியால், சர்க்கரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை சரிவால், கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பொருட்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய அளவில் சர்க்கரை உற்பத்தியில் மூன்றாவது இடம் வகித்து வந்த தமிழகம் தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ரூ.700 கோடி அளவிற்கு சர்க்கரை ஆலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள நடப்பாண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையை வழங்கவே தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் போராடி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு நடப்பு 2014-15ம் ஆண்டுக்கு கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2,650 வழங்குவதாக அறிவித்துள்ளது. இது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்க்கரை விலை குறைவால், கடந்த ஆண்டே நாங்கள் டன் ஒன்றுக்கு ரூ.2,350 தான் கொள்முதல் விலை அளித்தோம். தற்போது அறிவித்துள்ள கூடுதல் தொகையான 300 ரூபாயை அரசு எங்களுக்கு சலுகையாக வழங்க வேண்டும்.

சர்க்கரை மீது தமிழக அரசு ஐந்து சதவீதம் வாட் வரியை விதித்துள்ளது. ஏற்கனவே, சர்க்கரை ஆலைகள் கரும்பு கொள்முதல் செய்வதற்கு வரி செலுத்துகிறது. இதனால், இரட்டை வரிச் சுமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், சர்க்கரை வியாபாரிகள் விலை அதிகமாக இருப்பதாகக் கூறி, தமிழகத்தில் இருந்து சர்க்கரை வாங்க விரும்புவதில்லை.

எனவே, தமிழக அரசு வாட் வரியை முற்றிலும் நீக்க வேண்டும்.

எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்கள் மூலம் ஈடுகட்டலாம் என நினைத்தால் அதுவும் இப்போது சாத்தியமாகவில்லை. கரும்பின் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு தமிழக அரசு யூனிட் ஒன்றுக்கு ரூ.3.15 முதல் 3.76 காசுகள் மட்டுமே வழங்குகிறது. அதே சமயம், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6 வழங்கப்படுகிறது. சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. இதே நிலை நீடித்தால், சர்க்கரை ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT