ராமேசுவரம் அருகே உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளம்

 
வணிகம்

ராமேசுவரம் விமான நிலையம் அமைக்க 3 இடங்களில் ஆய்வு!

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் விமான நிலையம் அமைப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு இடங்களி லிருந்து ராமேசுவரத்துக்கு ஆண்டுக்கு சுமார் 4 கோடி வரையிலும் ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்களில் விமானம் மூலம் வருபவர்கள் முதலில் மதுரை, தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்கள் வந்து, அங்கிருந்து சாலை அல்லது ரயில் மூலம் ராமேசுவரம் வரவேண்டியுள்ளது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய 4 இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ராமநாதபுரம் விமான நிலையத்துக்கு ரூ.36.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என அறிவித்திருந்தார்.

இதற்காக தமிழக அரசு ஓடுபாதையுடன் விரிவான விமான நிலையத்தை அமைப்பதற்கு 700 ஏக்கர் தேவை என்பதால் உச்சிப்புளி மற்றும் கீழக்கரை அருகே 2 இடங்களை தேர்வு செய்துள்ளது. இந்த இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளது.

தமிழக அரசு சுட்டிக்காட்டிய உச்சிப்புளி, அருகிலுள்ள கிராமங்களான பெருங்குளம், கும்பரம் மற்றும் வாலாந்தரவை ஆகிய இடங்களும், கீழக்கரைக்கு அருகில் அமைந்துள்ள 2-வது தளத்தில், அண்டை கிராமங்களில் மணிக்கனேரி மற்றும் மாயாகுளம் ஆகிய இடங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக உச்சிப்புளிக்கு அருகிலுள்ள முதல் தளம் இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் பருந்து அருகே அமைந்துள்ளது. மாநில அரசு இந்த இடத்தைத் தேர்வு செய்தால், இந்திய கடற்படையின் ஒப்புதல் தேவைப்படும். மேலும் இந்த இடம் ராமேசுவரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளன.

கீழக்கரைக்கு அருகிலுள்ள 2-வது தளத்திலிருந்து ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோயில் சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வறிக்கையில் பரிந்துரைகளை வழங்கிய பிறகு, அரசாங்கம் அந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த விமான நிலையத்துக்கு குறைந்தது 600 ஏக்கர் நிலம் தேவைப்படும். இடம் தேர்வு செய்யப்பட்டதும் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT