‘சலுகைகள் கார்ப்பரேட்டுகளுக்கு... வரிச்சுமை சாமானியர்களுக்கு. முதலாளிகளுக்கு லாபம்... ஊழியர்களுக்கு ஏமாற்றம்!" - இதுதான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் முகம். ஆனால்...
“உங்களுக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் பசி அடங்குவதில்லை” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தீப்பிழம்பு வார்த்தைகள் வெறும் கோபம் மட்டும் இல்லை; அரசு போட்டுக்கொடுத்த ராஜபாட்டையில் பயணித்துவிட்டு பொறுப்பில் இருந்து நழுவும் கார்ப்பரேட் உலகுக்கு விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கை.
இதற்கு முன்பு இதே பிரச்சினைகளையும் கவலைகளையும் எதிர்க்கட்சிகள் பலமுறை எழுப்பியுள்ளன. இருப்பினும், பிரதமரே இவற்றை ஒப்புக்கொண்டுள்ளதால், கார்ப்பரேட் உலகின் மெத்தனப் போக்கைச் சாடிய அவரது பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் இருந்து வரிச்சலுகைகளையும் கொள்கை ஆதரவையும் அள்ளிக்கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், அதற்குப் பதிலாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமலும், ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் லாபத்தை மட்டுமே கவனமாக பதுக்கிக் கொண்டிருப்பது பிரதமர் மோடியையே பொறுமை இழக்கச் செய்துள்ளது.
இதனால் கார்ப்பரேட் முதலாளிகளை நோக்கி, “நீங்கள் உங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினீர்களா? புதிய வேலைகளை உருவாக்கினீர்களா?” என அவர் நேருக்கு நேராக கேள்வி எழுப்பியுள்ளார்.
தனிநபர் வரி வருவாயை மட்டுமே நம்பி பொருளாதாரத்தை கொண்டு செல்ல முடியாது என்ற யதார்த்தம் உறைத்ததன் வெளிப்பாடாகவே, டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி நடந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) நூற்றாண்டு விழாவில் பிரதமர் தனது சீற்றத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.
‘மேக் இன் இந்தியா’ ஏமாற்றம்
“கடந்த 1930-ல் காந்தி உங்களிடம் வந்து ‘சுதேசி’ குறித்துதான் பேசினார். நீங்கள் 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டீர்கள். ஆனாலும் இன்றும் நான் அதே சுயசார்பு இந்தியா குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. இது உங்கள் வெற்றியா அல்லது தோல்வியா?” எனக் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, 1930-களுக்குப் பிறகு உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதில் இந்தியத் தொழில்துறை மிகக் குறைந்த அளவே முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சாடினார்.
இந்தியா ‘உலகின் மருந்தகம்’ என்று அழைக்கப்பட்டாலும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறது. இரும்புத் தாது மற்றும் பாக்சைட்டை ஏற்றுமதி செய்துவிட்டு, உயர்தர எஃகு மற்றும் அலுமினியக் கலவைகளை இறக்குமதி செய்கிறோம். “கோதுமையை ஏற்றுமதி செய்துவிட்டு, ரொட்டியை இறக்குமதி செய்யும் நாம் எப்படிப்பட்ட தொழிலதிபர்கள்?” என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
கடந்த 2014 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் 12 ஆண்டுகாலச் செயல்பாட்டை ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழ் ஆய்வு செய்ததில், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட மதிப்பில் (GVA) உற்பத்தித் துறையின் பங்களிப்பை 2025-க்குள் 25 சதவீதமாக உயர்த்தியும் இலக்கு எட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அரசாங்கத்தின் பழைய GVA புள்ளிவிவரப்படி, 2014-15 ஆண்டில் 17.3 சதவீதமாக இருந்த உற்பத்தித் துறையின் பங்கு, 2026 மார்ச் நிலவரப்படி 17.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவே பிரதமரின் அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும்.
வரிக்குறைப்பும் கார்ப்பரேட் மெத்தனமும்
“மத்திய அரசு கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தது. 12 லட்சம் ரூபாய் வரையிலான ஊதிய வருமானத்துக்கு வரிவிலக்கும் அளித்தது. இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதற்கு ஈடாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீங்கள் கைதட்ட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், உங்கள் பசி அவ்வளவு பெரியது. எவ்வளவு கொடுத்தாலும் போதாது. ‘மோடிஜி, நீங்கள் செய்யுங்கள்; நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்’ என்பதே உங்கள் மனநிலையாக உள்ளது. நிலைமை இப்படியேதான் தொடரப்போகிறதா?” என மோடி கடுமையாகப் பேசினார்.
மேலும், இந்தியப் பெருநிறுவனங்கள் சிறந்த தரமான பொருட்களை ஏற்றுமதிக்கு ஒதுக்கிவிட்டு, உள்நாட்டு மக்களுக்குத் தரம் குறைவான பொருட்களை வழங்குவதையும் அவர் கண்டித்தார். 140 கோடி மக்களையும் எளிதாகக் கிடைத்த சந்தையாக மட்டும் கருதாமல், அவர்களுக்கும் உயர்தரப் பொருட்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஊதியத் தேக்கமும் ‘கிக்’ பொருளாதாரமும்:
பிரதமரின் இந்த அதிருப்திக்குப் பின்னால் கசப்பான ஊதியத் தரவுகளும் உள்ளன. ‘டேட்டா ஃபார் இந்தியா’ (Data for India) மேற்கொண்ட ஆய்வின்படி, ‘2012 முதல் 2024 வரையிலான காலத்தில் பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் உயரவில்லை. மாறாக, 4 சதவீதம் சரிந்துள்ளது. தனியார் துறை நிரந்தரமான, சமூகப் பாதுகாப்பு கொண்ட தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியதால், இளைஞர்கள் உணவு விநியோகம், வாடகை வாகன ஓட்டுநர் போன்ற ‘கிக்’ (Gig) பணிகளைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தனிநபர்கள் வரிச்சுமை... கார்ப்பரேட் லாபம்:
வரிச்சலுகைகள் மூலம் பலனடைவது கார்ப்பரேட்டுகளே என்பதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வருமான வரித்துறை மற்றும் ‘ஜேஎம் ஃபைனான்சியல்’ அறிக்கைகளின்படி, 2013-14 ஆண்டில் மொத்த நேரடி வரி வருவாயில் 61.9 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரியின் பங்கு 2023-24 ஆண்டில் 46.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், சாமானியர்கள் செலுத்தும் தனிநபர் வருமான வரியின் பங்கு 38.1 சதவீதத்திலிருந்து 53.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2023-24 நிதியாண்டில் நிறுவனங்களின் வரி வசூலான ரூ.9.11 லட்சம் கோடியை விட, தனிநபர் வருமான வரி வசூல் ரூ. 10.45 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி பெருநிறுவனங்களின் வரிக்குப் பிந்தைய லாபம் 2020-21 ஆண்டில் ரூ.2.5 ட்ரில்லியனாக இருந்து, 2024-25 ஆண்டில் ரூ.7.1 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளது. ‘மோதிலால் ஓஸ்வால்’ நிறுவனத்தின் ஜூன் 2026 அறிக்கையின்படி, நிஃப்டி-500 நிறுவனங்களின் லாபம் 2025-26 நிதியாண்டில் ரூ.18.1 லட்சம் கோடியை எட்டி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.2 சதவீதம் என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
மோடியின் கோபத்துக்கான பின்னணி:
கடந்த 12 ஆண்டுகளாகத் தொழிலதிபர்களைத் தனது ‘நண்பர்கள்’ என்று அழைத்து வந்த பிரதமர் மோடி, இப்போது இவ்வளவு கடுமையாகப் பேசுவதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை உயர்த்தாததால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து நுகர்வுச் சரிவும், பொருளாதாரத் தேக்கமும் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவதாக, வரிச்சலுகைகளை அரசு வழங்கிய போதிலும், வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வால் மக்களிடம் ஏற்படும் அதிருப்தியை அரசாங்கம் மட்டுமே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மூன்றாவதாக, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காததால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை 334.26 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சாமானியர்களின் வியர்வையிலும் வரியிலும் வளரும் கார்ப்பரேட் உலகம், நாட்டின் வளர்ச்சிக்குத் அதன் பங்கை ஆற்றியே தீர வேண்டும் என்பதே பிரதமரின் இந்த எச்சரிக்கை வெளிப்படுத்தும் சாராம்சம்.