மாசிடோனியா நாட்டில் தொழில் தொடங்க வருமாறு, இந்திய தொழில் அதிபர்களுக்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடான மாசிடோனியாவில் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், சிஐஐ-யின் துணைத் தலைவர் டி.டி.அசோக் வரவேற்றார். மாசிடோனியா நாட்டு பிரதமர் நிக்கோலா குரூவ்ஸ்கி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
ஐரோப்பிய நாடுகள் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்பின்மையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாசிடோனியா ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிற நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன் மூலம், எங்கள் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள சிறந்த நாடுகளின் பட்டியலில் மாசிடோனியாவும் இடம் பெற்றுள்ளது. எங்கள் நாட்டில் ஒரு தொழிற்சாலை தொடங்க நான்கு மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்படுகிறது. மேலும், எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி வரும் லாபத்தை மீண்டும் அங்கேயே மறுமுதலீடு செய்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மாசிடோனியாவில் நான்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, பத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எங்கள் நாட்டில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலப் புலமை பெற்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பம் குறித்து பள்ளிகளில் கற்றுத் தரப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் பார்மா, விருந்தோம்பல், எரிசக்தி, உணவுப் பதப்படுத்துதல், விவசாயப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு நிக்கோலா குரூவ்ஸ்கி கூறினார்.