யூனியன் வங்கி நிகர லாபம் 13% சரிவு
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 13 சதவீதம் சரிந்து 302 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 348 கோடி ரூபாயாக இருந்தது.
அதே சமயம் வங்கியின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது.
கடந்த வருடம் டிசம்பர் காலாண்டில் 8,230 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் மொத்த வருமானம் இப்போது 8,921 கோடி ரூபாயாக இருக்கிறது.
நிகர வட்டி வரம்பு 2.57 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் இது 2.60 சதவீதமாக இருந்தது.
நிகர வட்டி வருமானம் 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் காலாண்டில் 1,963 கோடி ரூபாயாக இருந்த நிகர வட்டி வருமானம் இப்போது 2,120 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
மொத்த வாராக்கடன் 5.08 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.95 சதவீதமாகவும் இருக்கிறது.
ஐடியா நிகர லாபம் ரூ.767 கோடி
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 67 சதவீதம் உயர்ந்து 767 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 467 கோடி ரூபாயாக இருந்தது.
டேட்டா மற்றும் குரல் அழைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்ததன் காரணமாக நிகர லாபம் உயர்ந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானமும் 21.23 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் 6,613 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 8,017 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
மொத்த வருமானத்தில் டேட்டாவின் பங்கு 15.7 சதவீதமாகவும், இதர சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானம் 23.1 சதவீதமாகவும் இருப்பதாக ஐடியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2014-ம் ஆண்டு 2.22 கோடி புதிய வாடிக்கையாளர்களை இணைத்திருப்பதாக ஐடியா தெரிவித்திருக்கிறது.
மாருதி சுசூகி நிகர லாபம் 18% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 17.8 சதவீதம் உயர்ந்து 802 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 681 கோடி ரூபாயாக நிறுவனத்தின் நிகர லாபம் இருந்தது.
அதிக விற்பனை, உற்பத்தி செலவு குறைவு மற்றும் சாதகமான அந்நிய செலாவணி ஆகிய காரணங்களால் லாபம் உயர்ந்ததாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நிறுவனத்தின் நிகர விற்பனை 15.5 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 10,619 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது 12,263 கோடி ரூபாயாக இருக்கிறது.
இந்த காலாண்டில் வாகன விற்பனை 12.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் 3,23,911 வாகனங்கள் விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 2.25 சதவீதம் உயர்ந்து 3,687 ரூபாயில் முடிவடைந்தது.