பல மாதங்களாக எதிர்பார்த்த வட்டி குறைப்பினை ரிசர்வ் வங்கி பொங்கல் அன்று அறிவித்தது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ) 0.25 சதவீதம் குறையும் என்றும் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.
பண வீக்கம் குறைந்து வருவதை அடுத்து வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால் ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் (சிஆர்ஆர்) எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை.
வருகிற பிப்ரவரி 3-ம் தேதி கடன் மற்றும் நிதிக்கொள்கையினை ரிசர்வ் வங்கி அறிவிக்க இருந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 20 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் வட்டி குறைப்பு அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இதனால் ரெபோ விகிதம் 8 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. 2014 ஜனவரியில் ரெபோ விகிதத்தை 8 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது.
இதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதமும்(வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம்) 0.25 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது. வட்டி குறைப்பினை சி.ஐ.ஐ., பிக்கி உள்ளிட்ட தொழில் அமைப்புகளும் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்
இதனால் பொங்கலன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 729 புள்ளிகளும், நிஃப்டி குறியீட்டெண் 216 புள்ளிகளும் உயர்ந்தன.
வட்டி குறைப்பு அறிவித்தவுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் தங்களுடைய அடிப்படை வட்டி விகிதங்களை குறைத்தன. மற்ற வங்கிகளும் தங்களுடைய வட்டி விகிதங்களை குறைக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வட்டி குறைப்பு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. மேலும் குறையும் என்று எதிர்பார்ப்பதாக எஸ்.பி.ஐ.யின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.