கோடக் மஹிந்திரா வங்கியும் ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கியும் இணைவதற்கு கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள்.
கடந்த நவம்பரில் ஐ.என்.ஜி.வைஸ்யா வங்கியின் அனைத்து பங்குகளையும் 15,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக கோடக் மஹிந்திரா வங்கி அறிவித்தது. இதற்கான பங்குதாரர்களின் ஒப்புதல் நேற்று கிடைத்தது. இந்த இணைப்பு மூலம் தனியார் வங்கியின் நான்காவது பெரிய வங்கியாக கோடக் மாறும்.
இந்த இணைப்புக்கு ஒப்புதல் கிடைத்ததன் மூலம் இரு வங்கிகளின் பங்குகளும் 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. கோடக் மஹிந்திரா வங்கி பங்கு 5.44 சதவீதம் உயர்ந்து 1,340 ரூபாயில் முடிவடைந்தது. ஐ.என்.ஜி வைஸ்யா வங்கி பங்கு 5.43 சதவீதம் உயர்ந்து 925 ரூபாயில் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக சரிந்த பங்குச்சந்தை நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்து முடிந்தது.
ஐடிசி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிகம் கவனம் செலுத்தியதால் சென்செக்ஸ் 366 புள்ளிகள் வரை உயர்ந்தது. நிப்டி 132 புள்ளிகள் உயர்ந்தன. பி.எஸ்.இ. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் 1.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிந்தன.