விற்பவரையும் வாங்குபவரையும் ஒன்று சேர்க்கும் பரிவர்த்தனை செயல்முறைக்கு சந்தை என்று பெயர். சந்தை என்ற சொல்லுக்கு பல வெவ்வேறு அம்சங்கள் உண்டு. விற்பனை செய்யப்படும் பொருள், சந்தையின் செயல்பகுதி, பரிவர்த்தனை முறை ஆகியவைப் பொறுத்து சந்தையின் தன்மை மாறுபடும்.
பொருளின் அடிப்படையில் சந்தையை வகைப்படுத்தலாம். ஒரு பொருள் அதனின் மாற்று பொருள் ஆகியவை ஒரு சந்தை எனப்படும். உதாரணமாக ஆண், பெண் இருவரின் காலணிகளும் ஒன்றுக்கொன்று மாற்று பொருள் அல்ல. எனவே ஆண் காலணி ஒரு சந்தை என்றும், பெண் காலணி வேறு ஒரு சந்தை என்றும் பொருளியலில் குறிப்பிடப்படும்.
ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் உள்ள போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளதால், ஒவ்வொரு பகுதியும் ஒரு சந்தை எனப்படும். ஒவ்வொரு ஊரும் நகரமும் ஒரு சந்தை எனப்படும். இவற்றுக்கிடையே ஒரே பொருளின் விலையில் வேறுபாடு இருக்கும். சென்னை சந்தை, கரூர் சந்தை என்பது போல. விற்பவருக்கும், வாங்குபவருக்கும் உள்ள தொடர்பு முறையின் அடிப்படையில் சந்தை மாறுபடும். உள்ளூர் சந்தையில் விற்பவரும் வாங்குபவரும் நேரடியாக ஒரு இடத்தில் சந்தித்து பரிவர்த்தனை செய்வர். பங்குச் சந்தையில் தொலைபேசி, கணினி வழியாக தொடர்பு கொண்டு வியாபாரம் நடைபெறும். சில சந்தைகளில் விற்பவர் நேரடியாகவும் அல்லது முகவர்கள் மூலமாகவும் வாங்குபவரை சந்தித்து வியாபாரம் செய்வர்.
தொழில் வகை
சந்தையை வகைப்படுத்துவதும் உற்பத்தி தொழிலை வகைப்படுத்துவதும் வெவ்வேறாக உள்ளன. ஒரு பொருளும் அதன் மாற்றுப் பொருளும் ஒரு சந்தை என்று பார்த்தோம். ஆனால், தொழில் வகைப்பாட்டில் உற்பத்தி முறையின் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம். உதாரணமாக, கண்ணாடி பாட்டிலும், தகர குடுவையும் ஒன்றுக்கொன்று மாற்று பொருள் என்று பார்க்கும்போது இவை இரண்டும் ஒரே சந்தைதான்.
ஆனால், கண்ணாடி பாட்டில் உற்பத்தி தொழில் வேறு, தகர குடுவை உற்பத்தி வேறு என்றுதான் தொழில் வகைப்படுத்தப்படுகிறது. தகர பொருள் உற்பத்தித் தொழில் என்று பார்த்தால், எங்கெல்லாம் தகரம் பயன்பாட்டில் உள்ளதோ அவையெல்லாம் ஒரே உற்பத்தி தொழில் என்று வகைப்படுத்தப்படும். சில நேரங்களில் தொழில் வகைப்பாடும், சந்தை வகைப்பாடும் ஒன்றாக இருக்கும், தொலைபேசி பணிகள் போல.