மத்திய அரசின் பங்குவிலக்கல் நடவடிக்கையில் பால்கோ மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்குகளை வாங்க வேதாந்தா நிறுவனம் எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக நேற்று பேசிய இந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கை குறைப்பதற்கான பங்கு விலக்கல் நடவடிக்கையில் அரசு உறுதியாக இருந்து வருகிறது.
இது தொடரும்பட்சத்தில் நடப்பு நிதி ஆண்டிலேயே பங்குவிலக்கத்தின் மூலம் நிதி ஆதாரத்தை பெற முடியும் என்றார். வெளிப்படையான முறையில் இதற்கு சரியான விலை கொடுத்து நாங்கள் பெற்றுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டார்.
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் 64.9 சதவீத பங்குகளையும், பால்கோ நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளையும் வேதாந்தா வைத்துள்ளது. கடந்த மாதம் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியுடனான சந்திப்பின் போது இந்த நிதி ஆண்டுக்குள் இதை செய்வார் என்கிற நம்பிக்கை இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.