பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் நடப்பாண்டில் வட்டி விகிதம் மேலும் குறையும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி உதய் கோடக் தெரிவித்தார். நடப்பாண்டில் 0.75 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாக சுவிட்ஸர்லாந்தின் தாவோஸில் நடந்த உலக பொருளாதார மையத்தின் ஆண்டு கூட்டத்தில் கூறினார். பணவீக்கம் குறைவாக இருப்பதற்கு அடிப்படை பணவீக்க குறியீடு காரணமா என்று கேட்டதற்கு, பணவீக்கமே கட்டுக்குள்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய மத்திய வங்கி ஊக்க நடவடிக்கைகள் அளித்திருக்கிறது. இதன் காரணமாக பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த பணப்புழக்கம் இந்திய சந்தைகளுக்கும் வரும், இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு பலமடையும். நமது ரூபாய் பலமடைவது நமக்கு சவால்தான். ரூபாய் மதிப்பு பலமடையும் போது `மேக் இன் இந்தியா’ சவாலாக இருக்கும் என்றார்.
உலக பொருளாதார மையத்தின் ஐந்து நாள் மாநாடு சனிக்கிழமை முடிந்தது. இதில் 2,500 சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களும், 100க்கும் மேற் பட்ட இந்திய நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்றனர்.